மராட்டிய சட்டசபை இடைத்தேர்தல்: 2 தொகுதிகளிலும் மந்தமான வாக்குப்பதிவு


மராட்டிய சட்டசபை இடைத்தேர்தல்: 2 தொகுதிகளிலும் மந்தமான வாக்குப்பதிவு
x

மராட்டியத்தில் நடந்த சட்டசபை இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் மந்தமான வாக்குப்பதிவு நடைபெற்றது.

புனே,

பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் முக்தா திலக், லட்சுமண் ஜக்தாப் மறைவை அடுத்து அவர்களின் தொகுதிகளான கஸ்பா, சிஞ்வாட்டுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த மாதம் இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

முதலில் பிப்ரவரி 27-ந் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அன்று 12-ம் வகுப்பு தேர்வு நடப்பதால், தேர்தல் 26-ந் தேதிக்கு மாற்றப்பட்டது. பிப்ரவரி 7-ந் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. 8-ந் தேதி வேட்பு மனு பரீசிலனை நடந்தது.

தேர்தலில் பா.ஜனதா சார்பில் கஸ்பா தொகுதியில் ஹேமந்த் ராசனேவும், சிஞ்வாட்டில் மறைந்த எம்.எல்.ஏ.வின் மனைவி அஸ்வினி ஜக்தாப்பும் போட்டியிட்டனர். மகாவிகாஸ் அகாடி கூட்டணி சார்பில் கஸ்பாவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரவீந்திர தன்கேகரும், சிஞ்வாட்டில் தேசியவாத காங்கிரசை சேர்ந்த நானா காதேவும் போட்டியிட்டனர்.

கஸ்பா, சிஞ்வாட் தொகுதியை தக்க வைக்க பா.ஜனதாவினர் தீவிரம் காட்டினர். கட்சியின் மூத்த தலைவர்களான துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மந்திரி சந்திரகாந்த் பாட்டீல், மாநில தலைவர் சந்திரசேகர்பவன் குலே உள்பட மூத்த தலைவர்கள் அனைவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். பா.ஜனதாவுக்கு ஆதரவாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பூ கொடுத்து வரவேற்பு

இந்தநிலையில் கஸ்பா, சிஞ்வாட்டில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது. 5 லட்சத்து 68 ஆயிரத்து 954 வாக்காளர்கள் உள்ள சிஞ்வாட் தொகுதியில் 510 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. 2 லட்சத்து 75 ஆயிரத்து 428 வாக்காளர்கள் உள்ள கஸ்பா தொகுதியில் 215 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. சிஞ்வாட்டில் காலையிலேயே ஓட்டுப்போட வந்தவர்களை தேர்தல் பணியாளர்கள் ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர்.

வாக்குப்பதிவு தொடங்கியது முதலே மந்தமாகவே இருந்தது. வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து சென்றனர். உடல்நலம் பாதிக்கப்பட்டு படுக்கையில் உள்ள பா.ஜனதா எம்.பி. கிரித் பாபத் வீல்சேரில் வந்து ஜனநாயக கடமையை ஆற்றினார். அவர் கஸ்பா பேத்தில் உள்ள மையத்தில் ஓட்டுப்போட்டார்.

வாக்குப்பதிவு சதவீதம்

காலை 9 மணி வரை கஸ்பாவில் 6.5 சதவீதமும், சிஞ்வாட்டில் 3.52 சதவீதம் வாக்குகள் பதிவாகின. பிற்பகல் 3 மணி நிலவரப்படி கஸ்பாவில் 30.05 சதவீதமும், சிஞ்வாட்டில் 30.55 சதவீதமும் பதிவாகி இருந்தது. மாலை 5.30 மணி நிலவரப்படி கஸ்பாவில் 45.25 சதவீதமும், சிஞ்வாட்டில் 41.1 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது.

தேர்தலின் போது ஒரு சில இடங்களில் மட்டுமே சிறிய பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சிஞ்வாட்டில் வாக்குப்பதிவு மையத்துக்கு வெளியே பா.ஜனதா வேட்பாளரின் ஆதரவாளர்களும், உத்தவ் தாக்கரே அணி அதிருப்தி வேட்பாளர் ராகுல் காலதேவின் ஆதரவாளர்களுக்கும் இடையே லேசான மோதல் ஏற்பட்டது.

போலீசார் 2 தரப்பையும் அங்கு இருந்து கலைந்து போகவைத்தனர். மற்றபடி 2 தொகுதிகளிலும் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்ததாக போலீசார் கூறினர். வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிந்தது. வாக்கு எண்ணிக்கை வருகிற 2-ந் தேதி நடைபெறுகிறது. அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story