மராட்டியம்: 7 ஆயிரம் பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்


மராட்டியம்: 7 ஆயிரம் பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்
x

மராட்டியத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 7 ஆயிரம் பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



புனே,


மராட்டியத்தில் அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட பகுதியில் இயக்கப்படும் மருத்துவமனைகளில் நாள்தோறும் உள் மற்றும் வெளி நோயாளிகள் அதிகளவில் வருவது வழக்கம்.

இந்த நிலையில், மராட்டியத்தில் உள்ள அரசு கல்லூரிகளை சேர்ந்த 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள், விடுதிகளின் தரம் மற்றும் காலியாக இருக்கின்ற பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதனால், நோயாளிகளுக்கு சிக்கலான நிலை ஏற்பட்டது.

இதுபற்றி மராட்டிய மருத்துவ கல்வி மந்திரி கிரீஷ் மகாஜன் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும்படியும், இந்த விவகாரம் நீண்டு கொண்டே செல்ல வேண்டாம் என்றும் பயிற்சி மருத்துவர்களை வலியுறுத்தி உள்ளேன்.

போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள பயிற்சி மருத்துவர்களின் பாதி கோரிக்கைகளுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டது. பராமரிப்பு பணிகளுக்காக ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன் அவர்கள் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

எனினும், பயிற்சி மருத்துவர்கள் கூறும்போது, 1,432 மூத்த பயிற்சி மருத்துவர்களுக்கான நியமனம் செய்யப்பட வேண்டும். காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

அரசு கல்லூரி மாணவர்கள் தரமற்ற விடுதிகளால் அதிக சங்கடத்திற்கு ஆளாகின்றனர் என கூறியுள்ளனர். அரசிடம் இருந்து எங்களது கூட்டமைப்புக்கு பேச்சுவார்த்தைக்கான அழைப்பு எதுவும் வரவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.


Next Story