கே.ஆர்.பேட்டையில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கோலாகலம்


கே.ஆர்.பேட்டையில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கோலாகலம்
x

ேக.ஆர்.பேட்டையில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கோலாகலமாக தொடங்கியது. இதனை மந்திரிகள் கோபாலய்யா, நாராயணகவுடா தொடங்கி வைத்தனர்.

மண்டியா:

திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா

மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தாலுகா அம்பிரகரஹள்ளி பகுதியில் காவிரி, ஹேமாவதி, லட்சுமி தீர்த்தா நதிகள் ஒன்றாக இணையும் திரிவேணி சங்கமம் உள்ளது. இந்த திரிவேணி சங்கமத்தில் சாமி மலை மாதேஸ்வரா கால்பதித்தை நினைவு கூறும் வகையில் கும்பமேளா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2013-ம் ஆண்டு முதல் கும்பமேளா நடந்தது. அதன்பின்னர் இரண்டாவது கும்பமேளா நேற்று தொடங்கி வருகிற 16-ந் ேததி வரை நடத்த மாநில அரசு திட்டமிட்டிருந்தது.

கோலாகலமாக தொடங்கியது

அதன்படி முதல்நாளான நேற்று மகா கும்பமேளா நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியது. இதில் கலந்துகொண்ட மாவட்ட பொறுப்பு மந்திரி கோபாலய்யா, விளையாட்டு துறை மந்திரி நாராயணகவுடா ஆகியோர் முரசை கொட்டி தொடங்கி வைத்தனர். பின்னர் தொடங்கிய ரத ஊர்வலத்தில் மைசூரு, மண்டியா, சாம்ராஜ்நகரில் இருந்து எடுத்து வரப்பட்ட ஜோதிகள் வைக்கப்பட்டிருந்தது. இந்த ரத ஊர்வலத்தை சிறப்பிக்கும் வகையில் 113 கலை குழுவினர், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மேலும் பக்தர்கள் புலி உள்பட பல்வேறு வேடமிட்டு அசத்தினர். இந்த கலை நிகழ்ச்சிகளை 50 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாலையில் இருபுறமும் நின்று பார்த்து ரசித்தனர். ஜோதி ரத ஊர்வலத்தின் இறுதியில் ஊர்வலமாக எடுத்து வந்த ஜோதிகளை வைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

மடாதிபதிகள் மாநாடு

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாவட்ட விளையாட்டுத்துறை மந்திரி நாராயணகவுடா கூறியதாவது:-

2013-ம் ஆண்டைவிட இந்த ஆண்டு மகா கும்பமேளா நிகழ்ச்சியை சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதல்நாள் நிகழ்ச்சியான ஜோதி ரத ஊர்வலம் நடந்துள்ளது. இன்று மகா கும்பமேளா நிகழ்ச்சி நடக்கிறது. 15-ந் தேதி(நாளை) மடாதிபதிகள் மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 16-ந் தேதி திரிவேணி சங்கமத்தில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இதில் உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்து கொள்கிறார். இந்த திரிவேணி சங்கமத்தில் அவர் புனித நீராடுகிறார். இனி வரும் 3 நாட்களுக்கு விழா சிறப்பாக இருக்கும். ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ள இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story