மடிகேரி தசரா விழாவை பிரமாண்டமாக கொண்டாடவேண்டும்மந்திரி என்.எஸ்.போசராஜு பேச்சு
மடிகேரி மற்றும் கோணிகொப்பா தசரா விழாவை பிரமாண்டமாக கொண்டாடவேண்டும் என்று மாவட்ட பொறுப்பு மந்திரி என்.எஸ்.போசராஜு கூறியுள்ளார்.
குடகு-
மடிகேரி மற்றும் கோணிகொப்பா தசரா விழாவை பிரமாண்டமாக கொண்டாடவேண்டும் என்று மாவட்ட பொறுப்பு மந்திரி என்.எஸ்.போசராஜு கூறியுள்ளார்.
மடிகேரி தசரா
குடகு மாவட்டம் மடிகேரி மற்றும் கோணிகொப்பாவில் ஆண்டுதோறும் தசரா விழா கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு தசராவை அடுத்த மாதம் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் மடிகேரி, கோணிகொப்பா தசரா விழா குறித்து மாவட்ட பொறுப்பு மந்திரி என்.எஸ்.போசராஜு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மந்திரி போசராஜு கூறியதாவது:-
ஏற்கனவே பட்ஜெட்டில் தசராவுக்கு மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த நிதி வழங்கப்படும். அதற்கான முயற்சிகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. மடிகேரி, ேகாணிகொப்பாவில் சாலை, குடிநீர், மின்சாரம், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். நகராட்சி ஆணையர்களுக்கு கன்னடம் மற்றும் கலாசாரத்துறையின் நிதியை விடுவிப்பது குறித்து நிதித்துறை அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்படும்.
சுற்றுலாத்துறை மேம்படும்
மடிகேரி மற்றும் கோணிகொப்பா தசரா விழாவை பாரம்பரிய முறையில் கொண்டாட அரசு சார்பில் அனைத்து விதமான ஒத்துழைப்பும் வழங்கப்படும். இந்த தசரா விழாவை நடத்துவது குறித்து எந்த குழப்பமும் வேண்டாம். தசரா விழாவை வழக்கம்போல பிரமாண்டமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் எளிமையாக கொண்டாடப்பட்டது.
தற்போது கொரோனா தொந்தரவு இல்லை. இந்த தசரா விழாவின் முக்கிய நோக்கம், சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதுதான். மடிகேரி, கோணிகொப்பா தசராவில் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். இரவு 10 மணிக்கு மேல் கலை நிகழ்ச்சிகள் நடத்த கூடாது என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அது குறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.