10- வகுப்பு சிறுமி கடத்தல் 5 மாதத்தில் 2 முறை திருமணத்திற்காக விற்பனை...!


10- வகுப்பு சிறுமி கடத்தல் 5 மாதத்தில் 2 முறை திருமணத்திற்காக விற்பனை...!
x

கோட்டா மாவட்டத்தில் உள்ள கன்வாஸ் பகுதியில் உள்ள சதல்கேடி கிராமத்தில் உள்ள மற்றொரு நபருக்கு பணம் வாங்கி கொண்டு அவரை திருமணம் செய்து வைத்தனர்.

போபால்

மத்தியப் பிரதேசம் கட்னியில் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஐந்து மாதங்களுக்கு முன்புகடத்திச் செல்லப்பட்டார்.திருமணத்திற்காக அவர் இரண்டு முறை விற்பனை செய்யபட்டு உள்ளார். ஞாயிற்றுக்கிழமை தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட அந்த சிறுமி பின்னர் தனது இரண்டாவது கணவரின் வீட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

திங்களன்று கோட்டா பகுதியில் ரெயில்வே காவல்துறை (ஜிஆர்பி) பணியாளர்களால் அந்த சிறுமி மீட்கப்பட்டார்.

பின்னர் அந்த சிறுமி குழந்தைகள் நலக் குழுவில் ஒப்படைக்கப்பட்டார்.அதன் பிறகு அவர் ஒரு காப்பகத்திற்கு அனுப்பப்பட்டார்.தொடர்ந்து சிறுமியின் பெற்றோருக்கும், உள்ளூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து குழந்தைகள் நலக்குழு தலைவர் கூறியதாவது:-

மத்திய பிரதேசம் குத்லா போலீஸ் நிலையத்திற்குட்பட்ட கட்னியில் உள்ள பள்ளியில் 17 வயது சிறுமி 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். 10ம் வகுப்பு தேர்வு முடிந்து ஒரு சுற்றுலா பயணத்திற்காக வீட்டை விட்டு வெளியே வந்து உள்ளார். கட்னி ரெயில்வே நிலையத்தில் ரெயிலுக்காககாத்திருந்து உள்ளார். அப்போது சில இளைஞர்களுடன் பழக்கம் ஏற்பட்டது அவர்கள் அருகில் உள்ள பூங்காவிற்கு அழைத்துச் சென்று உள்ளனர். அவர்கள் அவளுக்கு உணவு மற்றும் குளிர்பானங்களை வழங்கினர், அதைத் தொடர்ந்து அவர் மயங்கி விட்டார்.

அவர் சுயநினைவுக்கு திரும்பிய போது, உஜ்ஜயினியில் உள்ள ஒரு ஓட்டல் அறையில் இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணுடன் இருந்து உள்ளார். அவர்கள் 3 பேரும் அவளை மிரட்டி 27 வயது இளைஞரை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினர். 3 பேரும் சேர்ந்து சிறுமியை அந்த நபருக்கு ரூ.2 லட்சத்திற்கு விற்பனை செய்து உள்ளனர்.

நான்கு மாதங்களுக்கு முன் பூச்சிக்கொல்லி மருந்தை தற்செயலாக உட்கொண்டு சிறுமியின் "கணவர்" உயிரிழந்து விட்டார்.அவரது "கணவர்" இறந்த துக்கத்திற்காக அவர் ஒரு மாத காலம் அவரது "மாமியார்களால்" சிறை வைக்கப்பட்டார்.

அதன்பிறகு, கோட்டா மாவட்டத்தில் உள்ள கன்வாஸ் பகுதியில் உள்ள சதல்கேடி கிராமத்தில் உள்ள மற்றொரு நபருக்கு பணம் வாங்கி கொண்டு அவரை திருமணம் செய்து வைத்தனர்.

தனது "இரண்டாம் கணவர்", தன்னை திருமணம் செய்து கொள்வதற்காக தனது மாமியார்களுக்கு 3 லட்சம் ரூபாய் கொடுத்ததாக சிறுமி கூறி உள்ளார். ஞாயிற்றுக்கிழமை, சிறுமி தற்கொலைக்கு முயன்றார் ஆனால் முடியாமல் தனது இரண்டாவது கணவரின் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார் என கூறினார்.

17 வயது சிறுமியை விற்பனை செய்ததாக மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணை போலீசார் கைது செய்துள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.




Next Story