மத்திய பிரதேச சட்டசபை தேர்தல்; அனைத்து தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டி: கெஜ்ரிவால்


மத்திய பிரதேச சட்டசபை தேர்தல்; அனைத்து தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டி: கெஜ்ரிவால்
x

மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் அனைத்து 230 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டியிடும் என கெஜ்ரிவால் கூறியுள்ளார்.




போபால்,


மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் நடந்த பொது கூட்டத்தில் கலந்து கொண்டு டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் இன்று கூறும்போது, மத்திய பிரதேசத்தில் 20 ஆண்டுகளாக அவர்கள் (பா.ஜ.க.வினர்) ஆட்சி செய்தனர். ஆனால், அவர்களுக்கு மாற்றாக ஆம் ஆத்மி வந்து உள்ளது.

அடுத்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க. பிரச்சனைகளை எதிர்கொள்ளும். ஆம் ஆத்மியை பார்த்து மோடிஜி (பிரதமர்) அச்சமடைந்து உள்ளார் என கூறியுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் வருகிற நவம்பரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் அனைத்து 230 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டியிடும் என அவர் கூறியுள்ளார்.

டெல்லியில் கல்வி பிரிவில் ஆம் ஆத்மி கட்சி புரட்சி செய்து உள்ளது என கூறிய அவர், எந்தவொரு கட்சியும், உங்களது குழந்தைகளுக்கு கல்வி வாக்குறுதி அளித்து வாக்கு கேட்கவில்லை. அவர்களுக்கு அதில் விருப்பமும் இல்லை என கூறியுள்ளார்.

இந்த உரையின்போது, டெல்லி, பஞ்சாப்பை போன்று மத்திய பிரதேசத்திலும் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அவர் கூறினார். மொஹல்லா கிளினிக்குகளை தொடங்கி இலவச சிகிச்சை அளிக்கப்படும்.

எங்களுக்கு வாக்களித்து ஆட்சி அதிகாரத்திற்கு வர ஒரு வாய்ப்பு வழங்குங்கள். நாங்கள் கூறியவற்றை செய்யவில்லை எனில், அடுத்து வாக்கு கேட்டு உங்களிடம் நான் வரமாட்டேன் என கூறியுள்ளார்.

காங்கிரஸ், பா.ஜ.க.வை சாடிய அவர், ஒருவர் அரசியல் பேரம் பேசி, எம்.எல்.ஏ.வை வாங்குகிறார்கள் என கூறுவார்கள். மற்றொருவர் எம்.எல்.ஏ.வை வாங்க தயாராவார்கள். மொத்த தேர்தல் நடைமுறையையே அவர்கள் மாற்றி வைத்து உள்ளனர். அரசியலமைப்பையே சந்தைகடையாக ஆக்கியுள்ளனர் என கூறியுள்ளார்.


Next Story