மத்திய பிரதேச முதல்-மந்திரிக்கு வழங்கப்பட்ட "டீ சூடாக இல்லை" - உணவு வழங்கிய அதிகாரி மீதான நோட்டீஸ் ரத்து!


மத்திய பிரதேச முதல்-மந்திரிக்கு வழங்கப்பட்ட டீ சூடாக இல்லை - உணவு வழங்கிய அதிகாரி மீதான நோட்டீஸ் ரத்து!
x

முதல்-மந்திரி பருகுவதற்காக வழங்கப்பட்ட “டீ சூடாக இல்லை” என்பதற்காக, அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க அனுப்பப்பட்டிருந்த நோட்டீஸ் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

போபால்,

மத்தியப் பிரதேசம் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பருகுவதற்காக வழங்கப்பட்ட "டீ சூடாக இல்லை" என்பதற்காக, அதற்கான பொறுப்பு அதிகாரி மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்குமாறு அனுப்பப்பட்டிருந்த நோட்டீஸ் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மத்தியப் பிரதேச நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்திற்காக முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் ரேவாவுக்குச் சென்று கொண்டிருந்தார். திங்கட்கிழமை காலை 11.30 மணிக்கு கஜுராஹோ விமான நிலையத்தில் முதல்வரின் போக்குவரத்து பயணத்தின் போது தேநீர் மற்றும் காலை உணவை ஏற்பாடு செய்யும் பணி, கன்ஹுவா என்ற அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆனால் கன்ஹுவாவால் ஏற்பாடு செய்யப்பட்ட தேநீர் குளிர்ச்சியாகவும் தரம் குறைந்ததாகவும் இருந்தது கண்டறியப்பட்டது.இதனையடுத்து முதல்-மந்திரிக்கு காலை உணவை ஏற்பாடு செய்ததற்கு பொறுப்பான ஜூனியர் சப்ளை அதிகாரி ராகேஷ் கன்ஹுவாவுக்கு காரணம் காட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அரசு தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், "மெனுவின்படி, தேநீர் மற்றும் காலை உணவை ஏற்பாடு செய்யும் பொறுப்பு உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் முதல்-மந்திரிக்கு வழங்கப்பட்ட தேநீர் தரம் குறைவாக குளிர்ச்சியாக இருந்தது.

இது மாவட்ட நிர்வாகத்திற்கு தர்மசங்கடமான சூழ்நிலையை உருவாக்கி, வி.வி.ஐ.பி.க்களுக்கான நெறிமுறை பற்றிய கேள்வியை எழுப்புகிறது. ஆகவே இன்னும் மூன்று நாட்களுக்குள் ஜூனியர் சப்ளை அலுவலர் கன்ஹுவா விளக்கம் அளிக்க வேண்டும்"என்று குறிப்பிடப்பட்டுள்ளது

இருப்பினும், இந்த நோட்டீசுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, ராஜ்நகர் சப்-கலெக்டர் டிபி திவேதியால் அனுப்பப்பட்ட இந்த நோட்டீசை, சத்தர்பூர் மாவட்ட கலெக்டர் சந்தீப் ரத்து செய்துள்ளார்.

இந்த நோட்டீஸின் நகல் சமூக வலைதளங்களில் அதிகம் பரப்பப்பட்டு விமர்சனங்கள் எழுந்ததால், மாவட்ட கலெக்டர் இந்த உத்தரவை பிறப்பித்தார். மேலும், கன்ஹுவா ஏற்பாடு செய்த தேநீர் மற்றும் காலை உணவு முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகானுக்கு வழங்கப்படவில்லை என்றும் திவேதி தெளிவுபடுத்தினார்.

மறுபுறம், மத்திய பிரதேச காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நரேந்திர சலுஜா, "மக்களுக்கு ரேஷன் கிடைக்காமல் போகலாம், ஆம்புலன்ஸ் கிடைக்காமல் போகலாம், ஆனால் முதல்-மந்திரி குளிர்ந்த தேநீர் குடிக்கக் கூடாது" என்று கேலியாக கூறினார்.


Next Story