மத்திய பிரதேசம்: மதுபான ஆலையில் இருந்து மீட்கப்பட்ட 39 குழந்தை தொழிலாளர்கள் மாயம்


மத்திய பிரதேசம்:  மதுபான ஆலையில் இருந்து மீட்கப்பட்ட 39 குழந்தை தொழிலாளர்கள் மாயம்
x

மத்திய பிரதேசத்தில் மதுபானம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் இருந்து, 39 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு அரசு நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர்.

போபால்,

மத்திய பிரதேசத்தில் மதுபான ஆலை ஒன்றில் குழந்தை தொழிலாளர்கள் இருக்கின்றனர் என கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான ஆணையத்தின் தலைவர் பிரியங் கனூங்கோ மற்றும் அவருடைய குழுவினர் இணைந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், ரெய்சன் மாவட்டத்தில் செஹத்கஞ்ச் பகுதியில் இருந்த சோம் என்ற மதுபானம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் இருந்து, 39 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு உள்ளனர். இதன்பின்பு, அவர்கள் அரசு நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், அவர்கள் காணாமல் போயுள்ளனர். இதுபற்றி கனூங்கோ கூறும்போது, மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்கள் அனைவரும் வாக்குமூலங்களை பதிவு செய்வதற்காக, சட்டத்தின்படி, சப்-டிவிசனல் மாஜிஸ்திரேட்டிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

ஆனால், அதிகாரிகள் பல மணிநேரம் கழித்தே சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். இதற்கிடையே, அவர்கள் 39 பேரும் மாயமாகி உள்ளனர். அவர்கள் கடத்தப்பட்டனரா அல்லது வேறு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனரா? என தெரியவில்லை.

இதனால், பல வழிகளில் இழப்பீடாக அவர்களுக்கு கிடைக்க வேண்டிய ரூ.5 முதல் ரூ.10 லட்சம் வரையிலான பணம் கொடுக்க முடியாமல் போயுள்ளது என கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து, நள்ளிரவில் அதிகாரி ஒருவரை முதல்-மந்திரி மோகன் யாதவ் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். நடந்த சம்பவத்திற்கு இரங்கலும் தெரிவித்து உள்ளார். இந்த சம்பவத்தில், குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். காணாமல் போனவர்களை தேடும் பணியில் மற்ற அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story