லக்னோ வர்த்தக வளாகத்தில் பிரார்த்தனை: குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை - உ.பி.முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவு!
தொல்லைகளை உருவாக்க முயற்சிக்கும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று யோகி ஆதித்யநாத் கூறினார்.
லக்னோ,
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோ நகரில் அபு தாபியைத் தலைமையிடமாகக் கொண்ட லுலு நிறுவனம் மிகப் பெரிய வர்த்தக வளாகத்தை நடத்தி வருகிறது. சமீபத்தில்தான் இந்த மால் திறக்கப்பட்டது.
இந்த மாலில் கடந்த சில தினங்களுக்கு முஸ்லிம் குழு ஒன்று நமாஸ் செய்வது போன்ற வீடியோ வெளியானது. இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது. முஸ்லிம்களுக்கு மட்டுமே லுலு மால் வேலைவாய்ப்பு கொடுத்ததாக குற்றசாட்டு எழுந்தது.
இந்த விவகாரத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியுள்ளதாவது, "லக்னோ நிர்வாகம் இந்த விஷயத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதுபோன்ற தொல்லைகளை உருவாக்க முயற்சிக்கும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.
இந்நிலையில், இந்த குற்றச்சாட்டை மறுக்கும் வகையில் லுலு நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதனிடையே, லுலு மாலில் அனுமன் சாலிசாவை பாடியது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். லுலு நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஜூலை 12 அன்று வணிக வளாகத்தில் தொழுகை நடத்திய எட்டு முஸ்லிம் ஆண்களில் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது மத உணர்வுகளை சீர்குலைத்த குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.பொது இடத்தை மத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதால் மத நல்லிணக்கத்தை மீறுவதாக சில இந்து அமைப்புகள் அவர்கள் மீது குற்றம் சாட்டின.
பின்னர், தொழுகை நடத்திய முஸ்லிம் நபர்களுக்கு பதிலடியாக, ஜூலை 15 அன்று பிரார்த்தனை நடத்த முயன்ற மூன்று இந்து மத ஆண்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் முஸ்லீம் நபர் ஒருவரும், தொழுகை நடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டார். அதற்கு அடுத்த நாள், 10-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தொடர் சர்ச்சையை அடுத்து, 'லுலு வளாகத்தில் மத வழிபாடுகளுக்கு அனுமதி கிடையாது' என நிர்வாகம் பலகை வைத்துள்ளது.