"உலகிலேயே மிகப்பெரும் அதிர்ஷ்டசாலி நானே.."- ராமர் சிலையை வடிவமைத்த சிற்பி பெருமிதம்
அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ராமர் சிலையானது, சிற்பி அருண் யோகிராஜ் என்பவரால் வடிவமைக்கப்பட்டதாகும்.
அயோத்தி,
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழா இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில், இந்தியாவில் உள்ள முக்கிய பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். பால ராமர் பிரதிஷ்டையை தொடர்ந்து பிரதமர் மோடி முதலில் தீப ஆராதனை காட்டி வழிபாடு நடத்தினார்.
இதற்கிடையில், அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பால ராமர் சிலையை வடிவமைத்த சிற்பியான அருண் யோகிராஜும் இந்த நிகழ்வில் பங்கேற்றார். அப்போது அவர் கூறுகையில், "நான் இப்போது உலகின் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். எனது முன்னோர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ராமர் ஆகியோரின் ஆசி எனக்கு எப்போதும் உண்டு. சில நேரங்களில் நான் கனவு உலகில் இருப்பது போல் உணர்கிறேன்" என்றார்.
குழந்தை வடிவ ராமர் சிலையை 3 சிற்பிகள் வடிவமைத்து இருந்த நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த அருண் யோகிராஜ் வடிவமைத்த சிலை தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இவரை பற்றி மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவிக்கையில், "ராமர் எங்கே இருக்கிறாரோ அங்கேயே அனுமனும் இருக்கிறார். ராமரையும் அனுமனையும் பிரிக்க முடியாது என்பதற்கு ஏற்றார்போல அனுமனின் பூமியான கர்நாடகாவில் இருந்து குழந்தை ராமர் சிலை தேர்வானதில் தவறில்லை" என்று கூறியிருந்தார்.