"நம்பிக்கை இழந்துவிட்டேன்; சிறையில் இறப்பதே நல்லது..."- கோர்ட்டில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் உருக்கம்


நம்பிக்கை இழந்துவிட்டேன்; சிறையில் இறப்பதே நல்லது...- கோர்ட்டில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் உருக்கம்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 8 Jan 2024 12:17 AM IST (Updated: 8 Jan 2024 12:36 PM IST)
t-max-icont-min-icon

நரேஷ் கோயலின் உடல்நிலை குறித்து தேவையான நடவடிக்கை எடுக்கும்படி அவரது வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மும்பை,

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 1992-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமாக வலம் வந்த ஜெட் ஏர்வேஸ் 2017-ம் ஆண்டுக்குப் பிறகு கடும் நஷ்டத்தைச் சந்திக்கத் தொடங்கியது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல், அவரது மனைவி அனிதா மற்றும் சில விமான நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் சிலர் மீது, கனரா வங்கியில் ரூ.538 கோடி பண மோசடி செய்தது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்திருந்தது. அந்த வழக்கின் அடிப்படையில் நரேஷ் கோயல் மீது அமலாக்கத்துறை பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ரூ.848.86 கோடி கடனில், ரூ. 538.62 கோடி மோசடி செய்யப்பட்டிருப்பதாக வங்கி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு செப்.1 ஆம் தேதி வங்கி மோசடி வழக்கு தொடர்பாக நரேஷ் கோயலை அமலாக்கத் துறை கைது செய்தது. அவர் தற்போது மும்பை ஆர்தர் சாலை சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ஜி.தேஷ்பாண்டே முன்பு ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். அதன் விசாரணைக்காக நேற்று முன் தினம் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது நரேஷ் கோயல், தனிப்பட்ட முறையில் தன்னிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். நீதிபதி அதற்கு அனுமதி அளித்தார்.

நீதிமன்றத்தின் ஆவணங்கள்படி, நரேஷ் கோயல் கூப்பிய கரங்களுடன் மொத்த உடலும் நடுங்கிய படி தனது உடல் நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும் தனது மனைவி அனிதா தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தனது மகளும் உடல்நிலை பாதிக்கப்படிருப்பதால், மனைவியை பார்த்துக்கொள்ள முடியவில்லை என்று கண்ணீ்ர மல்கக் கூறினார். தொடர்ந்து தற்போதுள்ள சூழ்நிலையில் நான் நம்பிக்கை இழந்து விட்டேன், உயிர் வாழ்வதை விட சிறையில் இறப்பதே நல்லது. என்னை ஜெ.ஜெ. மருத்துமனைக்கு அனுப்பாமல் சிறையில் மரணிக்க அனுமதிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அவரது உடல்நிலை குறித்து தேவையான நடவடிக்கை எடுக்கும்படி அவரது வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. நரேஷ் கோயலின் ஜாமீன் மனுவுக்கு அமலாக்கத் துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணை வரும் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


Next Story