ஆதிர்ரஞ்சன் சவுத்ரியின் இடைநீக்கம் ரத்து - மக்களவை செயலகம் அறிவிப்பு


ஆதிர்ரஞ்சன் சவுத்ரியின் இடைநீக்கம் ரத்து - மக்களவை செயலகம் அறிவிப்பு
x

கோப்புப்படம்

மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரியின் இடைநீக்கம் ரத்து செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கி கடந்த 11-ந்தேதி நிறைவடைந்தது. மணிப்பூர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து இந்த தொடரில் எதிர்க்கட்சிகள் புயலை கிளப்பி இருந்தன. இந்த தொடரின் நிறைவு நாளான கடந்த 11-ந்தேதி மக்களவையில் அமளியில் ஈடுபட்டு அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரியை சபாநாயகர் ஓம் பிர்லா இடைநீக்கம் செய்தார். அவரது நடவடிக்கை தொடர்பாக நாடாளுமன்ற சிறப்புரிமைக்குழு விசாரித்தது.

நாடாளுமன்ற சிறப்புரிமைக்குழு முன்பு ஆதிர்ரஞ்சன் சவுத்ரி நேற்று ஆஜரானார். அப்போது அவர், மக்களவையில் தனது ஒழுங்கீன செயல்பாடுகளுக்காக வருத்தம் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து ஆதிர்ரஞ்சன் சவுத்ரியின் இடைநீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தி குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை ஏற்று அவரது இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டது. அவரது தகுதி நீக்க நடவடிக்கை நேற்று முதல் ரத்து செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.


Next Story