தேங்கிய மழைநீரில் மூழ்கி இளம்பெண் பலி: பெங்களூரு மாநகராட்சிக்கு, லோக் அயுக்தா நோட்டீஸ்
தேங்கிய மழைநீரில் மூழ்கி இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் லோக் அயுக்தா தாமாக முன்வந்து வழக்கை பதிவு செய்துள்ளது. மேலும் இதுதொடர்பாக மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
பெங்களூரு:
தேங்கிய மழைநீரில் மூழ்கி இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் லோக் அயுக்தா தாமாக முன்வந்து வழக்கை பதிவு செய்துள்ளது. மேலும் இதுதொடர்பாக மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
தாமாக முன்வந்து வழக்கு
பெங்களூருவில் கடந்த வாரம் கனமழை பெய்தது. இடி-மின்னலுடன் கொட்டிய கனமழையால் தாழ்வான பகுதிகள், சுரங்க சாலைகளில் மழை வெள்ளம் தேங்கியது. கே.ஆர். சர்க்கிள் அருகே உள்ள சுரங்க சாலையிலும் மழைநீர் தேங்கியது. அப்போது அந்த வழியாக வந்த கார் நீரில் மூழ்கியது. மேலும் அதில் பயணித்த கம்ப்யூட்டர் என்ஜினீயரான பானு ரேகா என்ற இளம்பெண் பரிதாபமாக மூழ்கி உயிரிழந்தார்.
மாநகராட்சியின் அலட்சியம் தான் இளம்பெண்ணின் சாவுக்கு காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. மேலும் இதுதொடர்பாக ஐகிரவுண்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே லோக் அயுக்தா இதுதொடர்பாக தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.
மாநகராட்சி விளக்கம்
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் மாநகராட்சி சார்பில் நிர்வகிக்கப்பட்டு வரும் சுரங்க சாலையில் முறையாக பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை. அதனால் தான் இளம் பெண் உயிரிழந்தார்.
மக்களின் வரிப்பணத்தை பெற்று, வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளாமல் இருந்தது, மாநகராட்சியின் அலட்சியம் தான். சிறந்த சாலைகளை நிர்வகிப்பது சம்பந்தப்பட்ட நிர்வாகங்களின் கடமையாகும். ஆனால் அதில் மாநகராட்சி தவறிவிட்டது. எனவே இதுதொடர்பாக மாநகராட்சி விளக்கம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இதுகுறித்து லோக் அயுக்தா தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.