அளவுகோல் அடிப்படையில் செயல்படுத்துவோம்


அளவுகோல் அடிப்படையில் செயல்படுத்துவோம்
x

உத்தரவாதத்திற்கு நிபந்தனை இல்லை என்றும் அளவுகோல் அடிப்படையில் செயல்படுத்துவோம் என்று பரமேஸ்வர் திடீர் பல்டி அடித்துள்ளார்.

பெங்களூரு:-

5 வாக்குறுதிகள்

கர்நாடகத்தில் ஆட்சியை பிடித்தால் இல்லதரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்குவோம், அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டம் அமல்படுத்துவோம், வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை, ரேஷன் அட்டை தாரர்களுக்கு தலா 10 கிலோ இலவச அரிசி, அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவோம் என 5 வாக்குறுதிகளை உத்தரவாதமாக வழங்கியது.

இந்த வாக்குறுதிகளை கட்டாயம் நிறைவேற்றும் என்று காங்கிரஸ் கட்சி உத்தரவாத அட்டைகளையும் வழங்கியது. மேலும் அக்கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் முதலில் இந்த 5 உத்தரவாதங்களை அமல்படுத்துவோம் என்று கூறினார். இந்த உத்தரவாதத்தின் அடிப்படையில் காங்கிரசுக்கு பல்வேறு தரப்பு மக்களும் வாக்களித்தனர். இதனால் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைய இந்த உத்தரவாதங்களும் முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

நிபந்தனைகளுடன்...

இந்த நிலையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துவிட்டதால், மின்சாரம் கட்டணம் செலுத்த மாட்டோம் என்று சித்ரதுர்கா மாவட்டம் ஜாலிகட்டே கிராமத்தை சேர்ந்த மக்கள், மின்மீட்டர் அளவீடு செய்ய வந்த மின்வாரிய ஊழியரிடம் தெரிவித்த சம்பவம் நடந்தது. அதற்கு அந்த ஊழியர், 200 யூனிட் இலவச மின்சாரம் இன்னும் அமலுக்கு வரவில்லை. அதனால் இந்த மாதம் கட்டாயம் மின்கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று கூறினார். ஆனால் மக்கள் மின்கட்டணம் செலுத்த மாட்டோம் என்றனர். இதனால் மின்வாரிய ஊழியர் செய்வதறியாது அங்கிருந்து புறப்பட்டார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவரும், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவருமான ஜி.பரமேஸ்வர் நேற்று முன்தினம் நிருபர்களிடம் கூறுகையில், 'காங்கிரஸ் கட்சி தேர்தலின் போது அறிவித்த முக்கிய 5 உத்தரவாதங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். உத்தரவாதங்கள் நிபந்தனைகளுடன் தான் அமல்படுத்துவோம்' என்றார். இது மக்கள் மத்தியில் பெரும் விவாதமாக மாறியது. அதாவது தேர்தல் வாக்குறுதியின் போது நிபந்தனை விதிக்காத காங்கிரசார், இப்போது உத்தரவாத திட்டங்களுக்கு நிபந்தனைகள் விதிப்பது என்ன நியாயம் என்று கேள்வி எழுப்பினர்.

திடீர் பல்டி

இதனால் இந்த விவகாரத்தில் பரமேஸ்வர் நேற்று திடீரென்று பல்டி அடித்தார். இதுபற்றி அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'காங்கிரஸ் அறிவித்த உத்தரவாத திட்டங்களுக்கு எந்த நிபந்தனையும் விதிக்கப்படாது. ஆனால் அளவுகோல் இருக்கும். உத்தரவாதங்களை அமல்படுத்துவதற்கு முன்பு நாங்கள் நிதிநிலையை தயாரித்து வருகிறோம். உத்தரவாத திட்டங்களை அப்படியே செயல்படுத்த முடியாது. சில அளவுகோல்கள் வகுக்கப்பட வேண்டியதுள்ளது. அந்த அளவுகோல்களை நிர்ணயித்து உத்தரவாத திட்டங்களை செயல்படுத்துவோம்' என்றார்.


Next Story