ராகுல் காந்தி ராஜினாமா செய்து விட்டு மீண்டும் போட்டியிடட்டும்: ஏக்நாத் ஷிண்டே


ராகுல் காந்தி ராஜினாமா செய்து விட்டு மீண்டும் போட்டியிடட்டும்:  ஏக்நாத் ஷிண்டே
x

இந்தியாவில் உள்ள மின்னணு இயந்திரங்களின் வெளிப்படை தன்மை பற்றி கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி அவை கருப்பு பெட்டிகள் என சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.

மும்பை,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்து அதன் முடிவுகள் சமீபத்தில் வெளிவந்தன. இதில், பா.ஜ.க. பெரும்பான்மை பெறாதபோதும், அதன் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, ஆட்சியமைக்கும் அளவுக்கு தொகுதிகளை கைப்பற்றி இருந்தன. காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சமூக ஊடகத்தில் நேற்று (ஞாயிற்று கிழமை) வெளியிட்ட செய்தியில், மின்னணு இயந்திரங்களின் வெளிப்படை தன்மை பற்றி கேள்வி எழுப்பினார்.

இந்தியாவில் உள்ள மின்னணு இயந்திரங்கள் எல்லாம் கருப்பு பெட்டிகள். அவற்றை ஆய்வு செய்ய ஒருவரும் அனுமதிக்கப்படவில்லை. நம்முடைய தேர்தல் நடைமுறையில் உள்ள வெளிப்படை தன்மை பற்றி தீவிர கவலைக்குரிய விசயங்கள் கேள்வியாக உள்ளன என்று பதிவிட்டார்.

இந்நிலையில், மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறும்போது, ராகுல் காந்தி அவருடைய பதவியை ராஜினாமா செய்து விட்டு மீண்டும் போட்டியிடட்டும் என்றார்.

ரேபரேலி மற்றும் வயநாடு என 2 தொகுதிகளில் போட்டியிட்டு ராகுல் காந்தி வெற்றி பெற்றிருக்கிறார். அதில், அவர் கூறிய அதே மின்னணு இயந்திரங்களே பயன்படுத்தப்பட்டன.

அதனால், எல்லா இடத்திலும் மின்னணு இயந்திரங்கள் தவறாக உள்ளன என அவர் கூற வேண்டும். தேர்தலில் மீண்டும் போட்டியிட வேண்டும் என்று ஷிண்டே கூறியுள்ளார்.

தொடர்ந்து ஷிண்டே கூறும்போது, அவர்கள் நிறைய இடங்களில் வெற்றி பெற்றால், மின்னணு இயந்திரங்கள் நன்றாக வேலை செய்கின்றன என்பார்கள்.

குறைந்த இடங்களை கைப்பற்றினால் மின்னணு இயந்திரங்கள் தவறு செய்கின்றன என்பார்கள். இதுபோன்று நடக்குமா? என்ன வகையான அணுகுமுறையிது என அவர் கேட்டுள்ளார்.


Next Story