கடூர் அருகே உள்ள கவிகங்கா மலையில் சிறுத்தைகள் நடமாட்டம்
கடூர் அருகே உள்ள கவிகங்கா மலையில் 3 சிறுத்தைகள் நடமாடி வருகின்றன. அவைகள் அங்கு இருப்பது டிரோன் கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.
சிக்கமகளூரு
சிறுத்தைகள் நடமாட்டம்
சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா கவிகங்கா மலை அடிவாரத்தில் ஒரு கோவில் உள்ளது. அந்த கோவிலில் நேற்று திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்தது. திருமண நிகழ்ச்சியை டிரோன் கேமரா மூலம் புகைப்படக்காரர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்தார்.
இந்த நிலையில் அவர் டிரோன் கேமரா மூலம் மலையையும் வீடியோ எடுத்தார்.
அப்போது மலை மீது 3 சிறுத்தைகள் இருப்பது தெரியவந்தது. அதாவது மலை மீது 3 சிறுத்தைகள் இருந்தது டிரோன் கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த சிறுத்தைகள் அங்கும், இங்குமாக நடமாடியதையும் டிரோன் கேமரா படம் பிடித்து இருந்தது.
கிராம மக்கள் பீதி
அந்த காட்சிகளை பார்த்த திருமண வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் அலறி, அடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டனர். பின்னர் அவர்கள் இதுபற்றி கடூர் வனத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
மேலும் டிரோன் கேமராவில் பதிவான காட்சிகளையும் அவர்களிடம் ஒப்படைத்தனர்.
அந்த காட்சிகளை பார்த்த வனத்துறை அதிகாரிகள், 3 சிறுத்தைகளையும் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். சிறுத்தை நடமாட்டத்தால் அப்பகுதி கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.