அரசு, தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை
கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால், அன்றயை தினம் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் சம்பளத்துடன் விடுமுறை அளிக்கும்படி தலைமை செயலாளருக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு:-
சம்பளத்துடன் விடுமுறை
கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. கர்நாடக சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மே மாதம் 10-ந் தேதி சட்டசபை தேர்தலில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக, அன்றைய தினம் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கும்படி கர்நாடக தலைமை செயலாளருக்கு, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உத்தரவை மீறினால் நடவடிக்கை
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிப்பதுடன், ஊழியர்களுக்கு சம்பளமும் வழங்குவதால், அவர்கள் தவறாமல் சட்டசபை தேர்தலில் வாக்களிப்பார்கள் என்பதால், அந்த விடுமுறையை உறுதி செய்யும்படியும், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் தலைமை செயலாளருக்கு தோதல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் மத்திய, மாநில அரசுகளுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை அளிக்க வேண்டும்.
அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மீறி, பள்ளி, கல்லூரிகள், தனியார் அலுவகலங்கள் திறக்கப்பட்டு இருந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் தலைமை செயலாளருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பொது விடுமுறை அறிவிப்பதன் மூலமாக வாக்காளர்கள் எந்த பிரச்சினையும் இன்றி வாக்களிக்க வேண்டும், வாக்கு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என்ற காரணங்களால் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.