'மராட்டிய மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது' - ராகுல் காந்தி


மராட்டிய மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது - ராகுல் காந்தி
x

மராட்டிய மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

மும்பை,

முன்னாள் மந்திரியான பாபா சித்திக் 1999, 2004, 2009 ஆகிய ஆண்டுகளில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். உணவுத்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை மந்திரியாக பதவி வகித்துள்ளார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் சமீபத்தில்தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்

இந்த சூழலில் பாபா சித்திக், மும்பை பாந்திரா கிழக்கு நிர்மல் நகர், கோல்கேட் மைதானத்திற்கு அருகில் உள்ள அவரது மகன் ஷீசான் சித்திக் எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு நேற்று மாலை சென்று இருந்தார். அப்போது அலுவலகம் அருகே பாபா சித்திக்கை பின்தொடர்ந்த 3 பேர் கொண்ட கும்பல் அவர் மீது 3 ரவுண்ட் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினர்.

இந்த சம்பவத்தில் பாபா சித்திக் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மும்பை போலீசார் அவரை மீட்டு அருகே இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில், பாபா சித்திக் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மராட்டிய மாநிலத்தில் சட்ட-ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துவிட்டது என விமர்சித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பாபா சித்திக்கின் சோகமான மறைவு அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மராட்டிய மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதை இந்த பயங்கர சம்பவம் அம்பலப்படுத்துகிறது. அரசாங்கம் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். நீதி வெல்ல வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.



Next Story