குமாரசாமி சாதாரண வார்டுக்கு மாற்றம்-ஓரிரு நாளில் 'டிஸ்சார்ஜ்' ஆகிறார்


குமாரசாமி சாதாரண வார்டுக்கு மாற்றம்-ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ் ஆகிறார்
x
தினத்தந்தி 1 Sept 2023 10:00 AM IST (Updated: 1 Sept 2023 2:43 PM IST)
t-max-icont-min-icon

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குமாரசாமி சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரிகிறது.

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், ஜனதா தளம் (எஸ்) கட்சியின் மூத்த தலைவருமான குமாரசாமிக்கு ராமநகர் மாவட்டம் பிடதியில் வீடு உள்ளது. அங்கு தங்கியிருந்த நிலையில் கடந்த மாதம் (ஆகஸ்டு) 29-ந் தேதி இரவு குமாரசாமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பெங்களூரு அருகே பிடதியில் உள்ள தனது வீட்டில் இருந்த அவரை குடும்பத்தினர் காரில் விரைவாக ஜெயநகரில் உள்ள அப்பலோ மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அவருக்கு பக்கவாத பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. உடனடியாக அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து அவருக்கு டாக்டர்கள் தேவையான சிகிச்சை அளித்தனர். இதில் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

சாதாரண வார்டுக்கு மாற்றம்

இதையடுத்து டாக்டர்கள் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து நேற்று சாதாரண வார்டுக்கு மாற்றினர். அங்கு அவரது உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

இன்னும் ஓரிரு நாளில் குமாரசாமி 'டிஸ்சார்ஜ்' செய்யப்படுவார் என்று டாக்டர்கள் கூறினர். ஆனாலும் குமாரசாமி சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

தலைவர்கள் வாழ்த்து

இதற்கிடையே முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், முன்னாள் முதல்-மந்திரிகள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் அவரது உடல்நிலையை அவரது மனைவி அனிதா குமாரசாமியிடம் கேட்டு அறிந்தனர்.

மேலும் சித்தராமையா உள்ளிட்ட தலைவர்கள், குமாரசாமி பூரண குணமடைய வாழ்த்து தெரிவித்தனர். மேலும் நிர்மலானந்த சுவாமி மருத்துவமனைக்கு நேரில் சென்று குமாரசாமியிடம் உடல் நலம் குறித்துகேட்டறிந்தார். பின்னர் வெளியே வந்த நிர்மலானந்த சுவாமி நிருபர்களிடம், குமாரசாமி உடல் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்தார்.யாரும் பயப்பட வேண்டாம்

தனது தந்தையின் உடல்நிலை குறித்து நிகில் குமாரசாமி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள எனது தந்தையின் உடல்நிலை தற்போது நன்றாக உள்ளது. அவரை மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றியுள்ளனர். அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். சில நாட்கள் ஓய்வு எடுக்குமாறு டாக்டர்கள் கூறியுள்ளனர். கட்சி தொண்டர்கள், பொது மக்கள் என யாரும் பயப்பட தேவை இல்லை. சில நாட்களில் அவர் கட்சி பணிகளில் ஈடுபடுவார்.

எனது தந்தையின் உடல் நலம் பெற வேண்டி பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். மேலும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி உடல்நலம் விசாரித்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மடாதிபதிகளுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

இவ்வாறு நிகில் குமாரசாமி குறிப்பிட்டுள்ளார்.


Next Story