கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் விதத்தில் பஞ்சரத்னா யாத்திரையை குமாரசாமி தொடங்கி வைத்தார்


கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் விதத்தில் பஞ்சரத்னா யாத்திரையை குமாரசாமி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 27 Oct 2022 6:45 PM GMT (Updated: 27 Oct 2022 6:46 PM GMT)

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் விதத்தில் பஞ்சரத்னா யாத்திரையை முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தொடங்கி வைத்தார்.

பெங்களூரு:

ஜனதா தளம் (எஸ்) வெற்றி

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் விதத்தில் ஜனதா தளம் (எஸ்) சார்பில் பஞ்சரத்னா யாத்திரை தொடக்க விழா பெங்களூரு பசவனகுடியில் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கலந்துகொண்டு அந்த யாத்திரையை தொடங்கி வைத்து பேசியதாவது:-

பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் பாவங்களை சுமந்து கொண்டுள்ளன. காங்கிரசார் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும், பா.ஜனதாவினர் எந்த சங்கல்பமாவது செய்யட்டும்., வருகிற சட்டசபை தேர்தலில் ஜனதா தளம் (எஸ்) வெற்றி பெறுவது உறுதி. பா.ஜனதாவினர் மக்களிடம் இருந்து கொள்ளையடித்த பணத்தை வழங்குவார்கள். ஒரு ஓட்டுக்கு ரூ.2,000 மற்றும் குக்கர் உள்பட பல்வேறு பரிசு பொருட்களை வழங்குவார்கள்.

தரமான கல்வி

இது மக்கள் பணம். ஆனால் நாங்கள் யாருடைய பணத்தையும் கொள்ளையடிக்கவில்லை. காங்கிரசின் ஒற்றுமை யாத்திரையால் மக்களின் பிரச்சினைகள் தீராது. எங்களின் பஞ்சரத்னா யாத்திரையை இன்று (நேற்று) கவிகங்காதரேஸ்வரர் கோவிலில் பூஜை செய்து தொடங்கியுள்ளோம். நல்ல நாள் என்பதால் யாத்திரையை தொடங்கியுள்ளோம்.எங்களின் இந்த யாத்திரை முக்கியமானது. ஏழை-பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் தரமான கல்வி வழங்க வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் தனியார் பள்ளிக்கு இணையாக குழந்தைகளுக்கு அரசு பள்ளிகளில் கல்வி வழங்க வேண்டும். அனைவருக்கும் தரமான கல்வி வழங்குவதே எங்களின் குறிக்கோள்.

வேலை வாய்ப்புகள்

கொரோனா நெருக்கடியின்போது பள்ளிகள் நடைபெறாதபோதும், கட்டணத்தை செலுத்தும்படி பெற்றோருக்கு அழுத்தம் கொடுத்தனர். இதை மனதில் நிறுத்தி நாங்கள் கல்வி திட்டத்தை வகுத்துள்ளோம். குழந்தைகள் ஆங்கிலம் கற்பது அவசியமானது. தொழில் சார்ந்த வாழ்க்கைக்கு இது முக்கியம். மக்கள் அனைவருக்கும் இலவசமருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும்.

6 ஆயிரம் கிராம பஞ்சாயத்துகளிலும் பெரிய ஆஸ்பத்திரியை உருவாக்கி தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது எங்களின் விருப்பம். கிராமங்களில் மகப்பேறு வசதிகள் நன்றாக கிடைக்க செய்ய வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். வீடு இல்லாத அனைவருக்கும் வீட்டு வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தேன்.

நினைத்த திட்டங்கள்

ஆனால் நீண்ட காலம் முதல்-மந்திரி பதவியில் நீடிக்காததால் நான் நினைத்த திட்டங்களை செயல்படுத்த முடியாமல் போய்விட்டது. பா.ஜனதா ஆட்சியில் எதையும் செய்யவில்லை. கெம்பேகவுடா பெயரில் பல்கலைக்கழகம் மாகடியில் தொடங்கப்படும். இதன் மூலம் அனைவருக்கும் தொழிற்கல்வி கிடைக்கும் நிலை ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு குமாரசாமி பேசினார்.


Next Story