எவ்வளவு கொள்ளையடித்தாலும் நாட்டின் வளங்கள் குறையாது; குமாரசாமி சாடல்
கிழக்கிந்திய நிறுவனங்களை போல் தேசிய கட்சிகள் செயல்படுவதாகவும், எவ்வளவு கொள்ளையடித்தாலும் நாட்டின் வளங்கள் குறையாது என்று குமாரசாமி கூறியுள்ளார்.
பெங்களூரு:
கிழக்கிந்திய நிறுவனங்களை போல் தேசிய கட்சிகள் செயல்படுவதாகவும், எவ்வளவு கொள்ளையடித்தாலும் நாட்டின் வளங்கள் குறையாது என்று குமாரசாமி கூறியுள்ளார்.
முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை ஜனதா தளம் (எஸ்) கட்சியின் தலைவருமான குமாரசாமி ராமநகரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
வளங்கள் நிறைந்தவை
முன்பு மன்னர் ஆட்சி காலத்தில் ஒருவிதமான அடிமைத்தனம் இருந்தது. அதன் பிறகு முகலாயர்கள் ஆட்சியில் வேறு விதமான அடிமைத்தனம் இருந்தது. அதைத்தொடர்ந்து இங்கு வந்த கிழக்கிந்திய நிறுவனத்தினர் நமது நாட்டையே ஆட்சி செய்தனர். வணிகம் செய்ய வந்தவர்கள் நமது நாட்டை கொள்ளையடித்து சென்றனர். நமது நாட்டில் நாம் அவர்களுக்கு வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதே போல் தற்போது உள்ள தேசிய கட்சிகள் ஒரு விதத்தில் கிழக்கிந்திய நிறுவனங்களை போல் செயல்படுகின்றன. நமது நாடு கலாசாரம் கொண்டது. நமது நாடு வளங்கள் நிறைந்த நாடு. எவ்வளவு கொள்ளையடித்தாலும், இறைவன் நமக்கு கொடுத்துள்ள வளங்கள் குறையாது. காங்கிரஸ் ஆட்சியிலும் தற்போது கமிஷன் விஷயம் தொடங்குகிறது.
6-வது உத்தரவாத திட்டம்
இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். அதனால் தான் எல்லா பணிகளையும் இந்த அரசு நிறுத்தி வைத்துள்ளது. பெங்களூருவில் கடந்த 4 ஆண்டுகளில் நடைபெற்ற பணிகள் குறித்து விசாரணை நடத்துவதாக ஒரு மந்திரி சொல்கிறார். மந்திரிகள் தூங்கி எழுந்ததும் விசாரணை, விசாரணை என்று சொல்கிறார்கள். 5 உத்தரவாத திட்டங்களுடன் 'விசாரணை உத்தரவாதம்' கொடுக்க காங்கிரஸ் அரசு தயாராகியுள்ளது. இந்த காங்கிரசின் 6-வது உத்தரவாத திட்டம். இதற்கு முந்தைய அரசின் விசாரணை ஜோதி என்று பெயரிட்டு கொள்ளலாம்.
அரசின் தோல்விகளை மூடிமறைக்க மந்திரிகள் புதிய புதிய கருத்துக்களை கூறுகிறார்கள். அதிகாரிகள் பணி இடமாற்றத்தில் லஞ்சம் கைமாறுகிறது. ஒரே பணிக்கு முதல்-மந்திரி 4, 5 முறை உத்தரவிட்டுள்ளார். அதாவது ஒரு பணிக்கு 5 பேரை நியமித்துள்ளார். முதல்-மந்திரி அலுவலகத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது?. இந்த ஆட்சியில் அரசு அதிகாாிகள் பணி இடமாற்றத்தில் பெரிய அளவில் லஞ்சம் கைமாறுகிறது.
மக்கள் பிரதிநிதிகள்
நாங்கள் லஞ்சம் வாங்க மாட்டோம் என்று சொல்கிறார்கள். ஆனால் தூங்கி எழுந்ததும் பணி இடமாற்றத்தில் முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள். அரசு அதிகாரிகளை பா.ஜனதாவை விட மோசமான ரீதியில் காங்கிரசார் நடத்துகிறார்கள். ஆட்சி அதிகாரம் கிடைத்த உடனே ஆணவத்துடன் செயல்படாமல் மக்கள் பணியாற்ற வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் பொது வெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை முதலில் கற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.