வடகிழக்கு மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு ஆயுதங்கள் கடத்தல் கைதியிடம் போலீசார் விசாரணை
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு துப்பாக்கிகள் உள்பட பெருமளவு ஆயுதங்கள் கடத்தப்பட்டது குறித்து கைதியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவனந்தபுரம்,
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு துப்பாக்கிகள் உள்பட பெருமளவு ஆயுதங்கள் கடத்தப்பட்டது குறித்து கைதியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெங்களூருவில் ஆயுதம் கடத்தும் கும்பலின் நடமாட்டம் இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு கப்பன் பார்க் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். கடந்த 6-ந் தேதி பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் கேரளாவை சேர்ந்த நீரஜ் ஜோசப் என்பவர் சிக்கினார். அவரது பி.எம்.டபிள்யூ. காரில் சோதனை நடத்திய போது, 3 கைத்துப்பாக்கிகள், 99 தோட்டாக்கள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து, நீரஜ் ஜோசப்பை கப்பன் பார்க் போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், கண்ணூர் சிறையில் உள்ள கைதி ரஜீஷ் என்பவர் கூறியபடி துப்பாக்கிகளை கடத்தியதாக கூறினார்.
அதைத்தொடர்ந்து பெங்களூரு போலீசார் கண்ணூர் விரைந்து வந்து ரஜீஷை கைது செய்து பெங்களூரு கொண்டு சென்று ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
அப்போது, 'மியான்மரில் இருந்து துப்பாக்கிகள் உள்பட ஆயுதங்கள் வடகிழக்கு மாநிலமான நாகலாந்துக்கு கடத்தி வரப்படுகின்றன. பின்னர் அங்கிருந்து ஒரு துப்பாக்கிக்கு ரூ.70 ஆயிரம் கொடுத்து வாங்கிக்கொண்டு பெங்களூரு வழியாக கேரளாவுக்கு கடத்தி வருகிறோம். நாகலாந்தில் இருந்துதான் இந்தத் துப்பாக்கிகள் உள்பட ஆயுதங்கள் அனைத்தும் கேரளாவுக்கு கடத்தப்படுகின்றன என்று கூறினார்.
அதைத்தொடர்ந்து சிறையிலுள்ள ரஜீஷ் எதற்காக கேரளாவுக்கு ஆயுதங்களை கடத்துகிறார். இதற்கு முன்பு கடத்தப்பட்ட ஆயுதங்கள் யார்-யாருக்கு சென்றன என்பது குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. கைதி ரஜீஷ் கொலை செய்த சந்திரசேகரன் வழக்கு கேரளாவில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவமாகும்.
கோழிக்கோடு அருகே உள்ள வடகரை பகுதியைச்சேர்ந்த சந்திரசேகரன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் முக்கிய தலைவராக இருந்தார். கோஷ்டிப் பூசல் காரணமாக கட்சியில் இருந்து விலகி புதிதாக புரட்சி மார்க்சிஸ்ட் என்ற பெயரில் ஒரு கட்சியை தொடங்கினார்.
இந்தநிலையில், 8 ஆண்டுகளுக்கு முன்பு சந்திரசேகரன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ரஜீஷ் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சந்திரசேகரன் கொல்லப்பட்ட பின்னர் அவரது மனைவி ரமா புரட்சி மார்க்சிஸ்ட் கட்சியை நடத்தி வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் சந்திர சேகரனின் மனைவி ரமா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கோட்டையான வடகரை தொகுதியில் காங்கிரஸ் ஆதரவுடன் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.