தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு: சாட்டையுடன் கே.ஆர்.எஸ். அணையை முற்றுகையிட முயன்ற விவசாயிகள்


தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு: சாட்டையுடன் கே.ஆர்.எஸ். அணையை முற்றுகையிட முயன்ற விவசாயிகள்
x

தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கே.ஆர்.எஸ். அணையை விவசாயிகள் சாட்டையுடன் முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மண்டியா:

கர்நாடகம்-தமிழகம் இடையே காவிரி நீரை பங்கிட்டுக் கொள்வதில் நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. இதனால் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. சமீபத்தில் காவிரி நீர் ஒழுங்குமுறை குழு, தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடக்கூறி கர்நாடகத்திற்கு உத்தரவிடுமாறு காவிரி மேலாண்மை ஆணையத்திடம் பரிந்துரை செய்தது.

அதையடுத்து தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்குமாறு கர்நாடகத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் தற்போது கர்நாடகம் காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளது. நேற்றும் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் நீர் திறக்கப்பட்டு உள்ளது.

இதில் மண்டியாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர்(கே.ஆர்.எஸ்.) அணையில் இருந்து நேற்று வினாடிக்கு 7,180 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதுபோல் மைசூருவில் உள்ள கபினி அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன் அடிப்படையில் இவ்விரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு நேற்று வினாடிக்கு 9,180 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் 100 அடியாக குறைந்துள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 124.80 அடி ஆகும்.

இந்த நிலையில் காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று கே.ஆர்.எஸ். அணை முன்பு விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலையில் அணை முன்பு கரும்பு விவசாயிகளும், மதியம் கர்நாடக மாநில விவசாயிகள் சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அணையை விவசாயிகள் சாட்டையுடன் முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.


Next Story