கே.ஆர்.எஸ். அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியது
கடந்த 2 நாளில் 5 டி.எம்.சி. நீர்வந்ததால், கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியது. அதுபோல் கபினி அணை நிரம்ப இன்னும் 3 அடி நீர் மட்டுமே தேவையாக உள்ளது.
மைசூரு:
கர்நாடகம், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்கள் இடையே காவிரி நீர் பங்கீட்டு விவகாரத்தில் பிரச்சினை இருந்து வருகிறது. காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவுபடி தமிழகத்திற்கு ஆண்டுக்கு 177.52 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீர் திறக்கப்பட்டு வருகிறது.
இந்த நீர் குடகு மாவட்டம் குஷால்நகரில் உள்ள ஹாரங்கி, ஹாசனில் உள்ள ஹேமாவதி, மைசூருவில் உள்ள கபினி, மண்டியாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் எனும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து தான் திறக்கப்படுகிறது. இதில் ஹாரங்கி, ஹேமாவதி அணைகளில் திறக்கப்படும் நீர் கே.ஆர்.எஸ். அணைக்கு சென்று அங்கிருந்து காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படும்.
அதுபோல் கபினி அணையில் திறக்கப்படும் நீர் கபிலா ஆற்றில் கரைபுரண்டு, மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா அருகே திருமகூடலு சங்கமத்தில் காவிரியுடன் சங்கமித்து அகண்ட காவிரியாக சாம்ராஜ்நகர், தமிழகம்-கர்நாடகம் எல்லையான பிளிகுண்டுலு வழியாக ஒகேனக்கலை சென்றடைகிறது. இந்த 4 அணைகளும் தான் கர்நாடகம், தமிழ்நாடு காவிரி டெல்டா விவசாயிகளின் உயிர் நாடியாக விளங்கி வருகிறது.
நடப்பாண்டு ஜூலை மாதம் நிலவரப்படி தமிழகத்திற்கு காவிரியில் 34 டி.எம்.சி. நீர் வழங்க வேண்டும். ஆனால் கடந்த 22-ந்தேதி வரை 4 டி.எம்.சி. நீர் மட்டுமே திறக்கப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க தமிழக அரசு வலியுறுத்தி வந்தது. மேலும் காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் கர்நாடகத்திற்கு உத்தரவிட்டது.
ஆனால் கோடை மழை பொய்த்ததாலும், பருவமழை தொடங்க தாமதம் ஆனதாலும் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிய தொடங்கியது. கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு கே.ஆர்.எஸ். அணை நீர்மட்டம் 70 அடியாக இருந்தது. இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது கடினம் என கர்நாடக நீர்ப்பாசனத் துறையை தன்வசம் வைத்துள்ள துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.
இதற்கிடையே கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைய தொடங்கியது. குறிப்பாக காவிரி பாசன படுகையில் உள்ள அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வர தொடங்கியது. தற்போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
குறிப்பாக குடகு மாவட்டம், கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
நேற்று இரவு 8 மணி நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியது. 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் 102.35 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 49,280 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அதே வேளையில் அணையில் இருந்து வினாடிக்கு 5,067 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. கே.ஆர்.எஸ். அணைக்கு கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 5 டி.எம்.சி. நீர் வந்துள்ளதாக நீர்ப்பாசனத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதுபோல் கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் நேற்று மதியம் நிலவரப்படி 2,281 அடியாக இருந்தது. அணை நிரம்ப இன்னும் 3 அடி நீர் மட்டுமே தேவையாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 24,485 கனஅடி நீர் வந்தது.
அணையில் இருந்து 20 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கபிலா ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. எனவே கபிலா ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீர் திருமகூடலு சங்கமத்தில் சங்கமித்து தமிழகத்திற்கு நேற்று வினாடிக்கு 25 ஆயிரத்து 067 கனஅடி நீர் செல்கிறது. நேற்று முன்தினம் தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 15 ஆயிரத்து 452 கனஅடி நீர் சென்றது குறிப்பிடத்தக்கது. அணைகளுக்கு வரும் நீரின் அளவை பொறுத்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவும் படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகிறது.