நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை எதிரொலி: கே.ஆர்.எஸ். அணை மீண்டும் நிரம்பியது - இந்த ஆண்டில் 3-வது முறையாக முழு கொள்ளளவை எட்டி சாதனை
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரித்து கே.ஆர்.எஸ். அணை மீண்டும் நிரம்பி உள்ளது. இந்த ஆண்டில் 3-வது முறையாக முழு கொள்ளளவை எட்டி சாதனை படைத்துள்ளது.
மண்டியா:
கே.ஆர்.எஸ். அணை
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணை அமைந்துள்ளது. இந்த அணை கர்நாடகம், தமிழ்நாடு மக்களின் உயிர்நாடியாக விளங்குகிறது. இங்கிருந்து திறக்கப்படும் தண்ணீர் காவிரி வழியாக தமிழகம் நோக்கி செல்கிறது.
தென்மேற்கு பருவமழையின்போது கே.ஆர்.எஸ். அணையின் நீர்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்தில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதன்காரணமாக கே.ஆர்.எஸ். அணை ஜூலை மாதம் நிரம்பியது. நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் கடந்த செப்டம்பர் மாதமும் அணை 2-வது முறையாக நிரம்பியது.
இதையடுத்து அணையில் இருந்து அதிகமான தண்ணீா் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
நீர்பிடிப்பு பகுதியில் கனமழை
அதன்பிறகு மழை குறைந்ததால் அணைக்கு வரும் நீரின் அளவும் குறைந்தது. மேலும் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது. இதன்காரணமாக அணையின் நீர்மட்டமும் குறைந்து வந்தது. இந்த நிலையில், கர்நாடகத்தில் கடந்த சில தினங்களாக மீண்டும் கனமழை பெய்ய தொடங்கி உள்ளது. பெங்களூரு, மைசூரு, குடகு உள்ளிட்ட பகுதிகளில் தினமும் பலத்த மழை வெளுத்து வாங்குகிறது.
கே.ஆர்.எஸ். அணையின் நீர்பிடிப்பு பகுதியான குடகிலும் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து பெய்து வருகிறது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கே.ஆர்.எஸ். அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மீண்டும் நிரம்பியது
கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் நேற்று அணை தனது முழு கொள்ளளவை எட்டி மீண்டும் நிரம்பி உள்ளது. ஏற்கனவே கடந்த ஜூலை, செப்டம்பர் மாதங்களில் கே.ஆர்.எஸ். அணை நிரம்பி இருந்தது. தற்போது இந்த ஆண்டில் 3-வது முறையாக கே.ஆர்.எஸ். அணை நிரம்பி உள்ளது. ஒரு ஆண்டில் 3 முறை நிரம்பி கே.ஆர்.எஸ். அணை சாதனை படைத்துள்ளது. கே.ஆர்.எஸ். அணை வரலாற்றில் ஒரே ஆண்டில் 2 முறைக்கு மேல் நிரம்பியது இல்லை.
124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் தற்போது முழு கொள்ளளவுடன் தண்ணீர் காணப்படுகிறது. அணைக்கு வினாடிக்கு 36,733 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 34,860 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கபினி அணை
இதேபோல், மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமத்தில் உள்ள கபினி அணைக்கும் நீர்வரத்து கணிசமாக அதிகரித்து உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையில், நேற்று காலை 2,283.84 அடி தண்ணீர் உள்ளது.
அணைக்கு வினாடிக்கு 3,040 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 36,860 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அந்த தண்ணீர் அகண்ட காவிரியாக தமிழகம் நோக்கி செல்கிறது. இந்த ஆண்டில் கே.ஆர்.எஸ். அணை 3-வது முறையாக நிரம்பி உள்ளதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.