கே.ஆர்.எஸ். அணை நீர்மட்டம் கிடுகிடு உயர்வு


கே.ஆர்.எஸ். அணை நீர்மட்டம் கிடுகிடு உயர்வு
x

தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்ததால் கபினி அணை நிரம்ப இன்னும் ஒரு அடி மட்டுமே பாக்கி உள்ளது. அதுபோல் கே.ஆர்.எஸ். அணை நீர்மட்டமும் கிடுகிடு என உயர்ந்து வருகிறது.

மைசூரு:

தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்ததால் கபினி அணை நிரம்ப இன்னும் ஒரு அடி மட்டுமே பாக்கி உள்ளது. அதுபோல் கே.ஆர்.எஸ். அணை நீர்மட்டமும் கிடுகிடு என உயர்ந்து வருகிறது.

பருவமழை தீவிரம்

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளை குடகு, மைசூரு, மண்டியா மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் காவிரி படுகையில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.), கபினி, ஹாரங்கி, ஹேமாவதி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

அதிலும், கே.ஆர்.எஸ். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழையாலும், கபினி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மற்றும் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்து வரும் மழையாலும் இரு அணைகளுக்கும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது.

104 அடியை எட்டிய கே.ஆர்.எஸ்.

இதனால் இரு அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்த வண்ணம் இருந்தது. பருவமழை தாமதமாக தொடங்கியதால் 70 அடிக்கு நீர் இருப்பு குறைந்திருந்த கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயரத் தொடங்கியது. இதனால் 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணை நேற்று முன்தினம் காலை 100 அடியை எட்டியது. மாலையில் அணையின் நீர்மட்டம் 102 அடியை தாண்டியது.

தொடர்ச்சியாக அணைக்கு நீர் வந்த வண்ணம் உள்ளதால், நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 104 அடியை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 51 ஆயிரத்து 508 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அதே வேளையில் அணையில் இருந்து வினாடிக்கு 5,069 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதே போல் அணைக்கு நீர்வரத்து இருந்தால், இ்ன்னும் ஒரு வாரத்திற்குள் அணை நிரம்பி விடும் என நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கபினி அணை நிரம்ப ஒரு அடி பாக்கி

அதுபோல் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் உள்ள கபினி அணைக்கும் (கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு), நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 2,283 அடியாக இருந்தது. அணை நிரம்ப இன்னும் ஒரு அடி மட்டுமே பாக்கி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 25 ஆயிரத்து 146 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அதே வேளையில் அணையில் இருந்து 4 மதகுகள் வழியாக வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் கபிலா ஆற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது. இதன் காரணமாக எச்.டி.கோட்டை, டி.நரசிப்புரா, நஞ்சன்கூடு தாலுகாக்களில் ஆற்றங்கரையொட்டி வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.

வினாடிக்கு 25,069 கனஅடி நீர்

மேலும் கபிலா ஆற்றில் திறக்கப்பட்ட கபினி அணை நீரும், காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட கே.ஆர்.எஸ். அணை நீரும் மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா அருகே திருமகூடலு சங்கமா என்ற இடத்தில் சங்கமித்து அகண்ட காவிரியாக தமிழகத்திற்கு பாய்ந்தோடி வருகிறது. தற்போது இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 25 ஆயிரத்து 69 கனஅடி நீர் தமிழகத்திற்கு செல்கிறது. இதனால் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் காவிரி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story