'கிரகஜோதி' திட்டம், நாட்டுக்கே முன்னோடி திட்டமாகும்-மந்திரி கே.ஜே.ஜார்ஜ் பேச்சு


கிரகஜோதி திட்டம், நாட்டுக்கே முன்னோடி திட்டமாகும்-மந்திரி கே.ஜே.ஜார்ஜ் பேச்சு
x

‘கிரகஜோதி’ திட்டம் நாட்டுக்கே முன்னோடி திட்டமாகும் என்று மின்சாரத்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

கலபுரகி:-

கலபுரகியில் நேற்று நடைபெற்ற 200 யூனிட் இலவச மின்சார திட்ட தொடக்க விழாவில் மின்சாரத்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் பேசியதாவது:-

விண்ணப்பித்தவர்களுக்கு இலவசம்

காங்கிரஸ் கட்சி சட்டசபை தேர்தலில் கொடுத்த ஒவ்வொரு வாக்குறுதிகளையும் படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. அதன்படி, நாங்கள் சட்டசபை தேர்தலில் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவோம் என்று அறிவித்திருந்தோம். அந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 200 யூனிட் இலவச மின்சாரத்திற்காக 1.43 கோடி பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

அவர்கள் ஜூலை மாத மின் கட்டணம் செலுத்த வேண்டாம். மின் கட்டணம் பூஜ்ஜியம் என்று ரசீது கொடுத்துள்ளோம். கிரகஜோதி திட்டத்திற்கு விண்ணப்பிக்க கடந்த மாதம்(ஜூலை) 27-ந் தேதி வரை அனுமதி வழங்கி இருந்தோம். அதன்படி விண்ணப்பித்தவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு உள்ளது.

காலக்கெடு இல்லை

இந்த மாதத்திற்கான இலவச மின்சாரத்தை பெறுவதற்கும் தகுதி படைத்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 200 யூனிட் இலவச மின்சாரம் பெறுவதற்கு எந்த விதமான காலக்கெடுவும் இல்லை. தகுதி படைத்தவர்கள் அனைவருக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கும். நாட்டிலேயே இது ஒரு முன்னோடியான திட்டமாகும். நாட்டில் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர்களின் விலை உயர்ந்து வரும் நிலையில், கிரகஜோதி திட்டம் ஒரு வரப்பிரசாதமாகும்.

ஏழை மக்களுக்கு பணம் கிடைத்தால், அதனை வீட்டில் சேமித்து வைக்க முடியாது. அவர்களது தினசரி தேவைக்காக பயன்படுத்துகிறார்கள். கிரகஜோதி திட்டம், ஏழை மக்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக அமைந்துள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கேவை பா.ஜனதாவினர் திட்டமிட்டு தோற்கடித்திருந்தனர். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் கலபுரகி தொகுதியில் மல்லிகார்ஜுன கார்கேவை வெற்றி பெற செய்து மாநில மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story