சொத்து குவிப்பு வழக்கில் கைதான கே.ஆர்.புரம் தாசில்தார் பணியிடைநீக்கம்


சொத்து குவிப்பு வழக்கில் கைதான கே.ஆர்.புரம் தாசில்தார் பணியிடைநீக்கம்
x
தினத்தந்தி 2 July 2023 12:15 AM IST (Updated: 2 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட கே.ஆர்.புரம் தாசில்தாரை பணி யிடைநீக்கம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. விசாரணையில் கார் பந்தய மைதானம் அமைக்க அவர் திட்டமிட்டு இருந்தது தெரிந்தது.

பெங்களூரு:

பெங்களூரு கே.ஆர்.புரம் தாசில்தாராக இருந்தவர் அஜித்குமார் ராய். இவர் உள்பட முக்கிய அரசு அதிகாரிகளின் வீடுகளில் கடந்த 28-ந் தேதி லோக் அயுக்தா போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது சொத்து ஆவணங்கள், தங்க, வெள்ளி நகைகள், விலையுயர்ந்த கார்கள் ஆகியவை சட்டவிரோதமாக வாங்கி இருந்தது தெரிந்தது. தாசில்தார் அஜித்குமார் ராய்க்கு சொந்தமான சககாரநகர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர் சட்டவிரோதமாக ரூ.1,000 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை குவித்தது தெரியவந்தது.

இதில் சொகுசு கார்கள், 700 கிராம் தங்கம், ரூ.40 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவை அடங்கும். மேலும் அவர் தனது குடும்பத்தினர், நண்பர்களை பினாமியாக பயன்படுத்தி அவர்கள் பெயரிலும் சொத்துக்களை வாங்கி குவித்ததும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் வருமானத்திற்கு அதிகமான சொத்து குவித்ததற்காக அஜித்குமார் ராயை, லோக் அயுக்தா போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மேலும் அவரை 7 நாட்கள் காவலில் எடுத்து லோக் அயுக்தா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அஜித்குமார் ராயின் சொந்த ஊரான புத்தூருக்கும் அவரை லோக் அயுக்தா போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் லோக் அயுக்தா போலீசாரால் கைதாகி உள்ள கே.ஆர்.புரம் தாசில்தார் அஜித்குமார் ராயை, பணியிடைநீக்கம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.


கைதான தாசில்தார் அஜித்குமார் ராய்க்கு சொகுசு கார்கள் மற்றும் கார் பந்தயங்கள் மீது அதீத மோகம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் சுமார் 11 சொகுசு கார்களை வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார். மேலும் அவர் நொய்டா, உத்தரபிரதேசத்தில் உள்ள கார் பந்தய மைதானங்களுக்கு அடிக்கடி சென்று போட்டியை ரசித்து வந்துள்ளார். மேலும் வெளிநாடுகளுக்கு சென்றும் பார்முலா-1 கார் பந்தய போட்டியையும் பார்த்து ரசித்துள்ளார்.

கார் பந்தயம் மீது அலாதி பிரியம் கொண்ட அஜித்குமார் ராய், பெங்களூருவில் சர்வதேச தரத்தில் பிரமாண்ட கார் பந்தய மைதானத்தை அமைப்பதற்கு திட்டமிட்டார். இதற்கான பணிகளையும் அவர் மேற்கொண்டு வந்துள்ளார். மேலும் கார் பந்தய மைதானத்தை தொடங்கி அதன் மூலம் பணம் சம்பாதிக்கவும் அவர் ஏற்பாடு செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story