கர்நாடகத்தின் 'நெற்களஞ்சியம்' என்று அழைக்கப்படும் கொப்பல் மாவட்டத்தில் கொடி நாட்டப்போவது யார்?
கர்நாடக சட்டசபை தேர்தலில் கொப்பல் மாவட்டத்தை கைப்பற்றப்போவது யார் என்பது பற்றி இங்கு காண்போம்.
கொப்பல்:
வடகர்நாடக மாவட்டங்களில் முக்கியமான மாவட்டம் கொப்பல் ஆகும். இந்த மாவட்டம் ராய்ச்சூர் மாவட்டத்தில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்டது ஆகும். இந்த மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக விளங்குகிறது.கர்நாடகத்தின் நெற்களஞ்சியம் என்றும் கொப்பல் மாவட்டத்தை அழைக்கிறார்கள். இந்த மாவட்டத்தில் கொப்பல், கங்காவதி, குஷ்டகி, எலபூர்கா, கனககிரி, கரடகி, குகனூர் ஆகிய தாலுகாக்கள் உள்ளன.
முன்பு இந்த மாவட்டம் 'கொப்பன நகரா' என்று அழைக்கப்பட்டு வந்தது. பின்னர் கொப்பல் என்று பெயர் மாற்றம் பெற்றது. புராதன நகரமான ஹம்பியில் சில பகுதிகள் இந்த மாவட்டத்தின் கீழ் அடங்கி உள்ளது. இந்த மாவட்டத்தில் விதை உற்பத்தி அதிக அளவில் செய்யப்படுகிறது. ஏராளமான விதை தயாரிப்பு நிறுவனங்கள் இந்த மாவட்டத்தில் தங்களது நிறுவனங்களை நிறுவி விடை தயாரிப்பு மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இப்படி பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்த மாவட்டத்தில் குஷ்டகி, எலபூர்கா, கனககிரி, கங்காவதி, கொப்பல் ஆகிய 5 சட்டசபை தொகுதிகள் உள்ளன. லிங்காயத், குருபா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் இந்த மாவட்டத்தில் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். முஸ்லிம் மக்களும் 7 சதவீதம் பேர் வசித்து வருவதாக கடந்த 2011-ம் ஆண்டு அரசு வெளியிட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜனதா 3 தொகுதிகளையும், காங்கிரஸ் 2 தொகுதிகளையும் கைப்பற்றி இருந்தன. தற்போது ஆளும் பா.ஜனதா கொப்பல் மாவட்டத்தை முழுமையாக கைப்பற்றி விட வேண்டும் என்ற முனைப்பிலும், அவர்களிடம் இருந்து அனைத்து தொகுதிகளையும் தட்டிப்பறித்து விட வேண்டும் என்ற கணக்கில் காங்கிரசும் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றன.
குஷ்டகி
குஷ்டகி தொகுதியில் தற்போது எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் அமரேகவுடா. காங்கிரஸ் கட்சியில் உள்ள மூத்த தலைவர்களில் இவரும் ஒருவர். கடந்த 2013-ம் ஆண்டு இத்தொகுதியில் நடந்த தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் தொட்டண்ணகவுடா பட்டீலிடம் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். ஆனால் 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தொட்டண்ணகவுடாவிடம் இருந்து 18 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை தட்டிப்பறித்தார். நடைபெற இருக்கும் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அமரேகவுடாவே போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் தொட்டண்ணகவுடா பட்டீல் களம் காண்கிறார். மேலும் ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் சரணப்பா கும்பாரா, ஆம் ஆத்மி கட்சி சார்பில் கனகப்பா மாலகவி ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.
கனககிரி
கனககிரி தொகுதியில் தற்போது பா.ஜனதாவைச் சேர்ந்த பசவராஜ் தாதேசுகூர் எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். நடைபெற இருக்கும் தேர்தலிலும் அவரே பா.ஜனதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் சிவராஜ் தங்கடகி களம் காண்கிறார். கடந்த 2013-ம் ஆண்டு கர்நாடக ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு சிவராஜ் தங்கடகியிடம் தோல்வி அடைந்த பசவராஜ் தாதேசுகூர், கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றிக்கனியை பறித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆம் ஆத்மி கட்சி சார்பில் அனில்குமார் பேகர், ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் ராகவேந்திரா நாயக் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
கங்காவதி
கங்காவதி தொகுதியில் தற்போது பா.ஜனதாவைச் சேர்ந்த ஈசுவரப்பா முனாவளி எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். கடந்த 2008-ம் ஆண்டு இத்தொகுதியில் நடந்த தேர்தலில் பா.ஜனதா சார்பில் வெற்றிபெற்று இருந்த ஈசுவரப்பா முனாவளி, 2013-ம் ஆண்டு ஜனதா தளம்(எஸ்) கட்சி வேட்பாளர் இக்பால் அன்சாரியிடம் தோல்வி அடைந்தார். மீண்டும் 2018-ம் ஆண்டு இக்பால் அன்சாரியை எதிர்கொண்டு ஈசுவரப்பா முனாவளி வெற்றிபெற்றார். ஆனால் அப்போது இக்பால் அன்சாரி காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு இருந்தார். நடைபெற இருக்கும் தேர்தலிலும் பா.ஜனதா சார்பில் ஈசுவரப்பா முனாவளி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் இக்பால் அன்சாரி களம் காண்கிறார். ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் சரணப்ப சஜ்ஜிஹோலே என்பவரும் களத்தில் உள்ளார்.
எலபூர்கா
எலபூர்கா தொகுதியில் தற்போது எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் ஹாலப்பா ஆச்சார். இவர் தற்போது கனிமம் மற்றும் புவியியல் துறை மந்திரியாக இருந்து வருகிறார். பா.ஜனதா கட்சியில் மூத்த தலைவரான இவர் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அப்போது சித்தராமையா தலைமையிலான மந்திரி சபையில் உயர்கல்வித்துறை மந்திரியாக இருந்த பசவராஜ் ராயரெட்டியை 18 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். கடந்த 1999-ம் ஆண்டு ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் களம் கண்ட ஹாலப்பா ஆச்சார், அதன்பின்பு பா.ஜனதாவில் சேர்ந்து தற்போது மந்திரியாகி விட்டது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் தேர்தலிலும் பா.ஜனதா சார்பில் ஹாலப்பா ஆச்சாரே களம் காண்கிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் பசவராஜ் ராயரெட்டி போட்டியிடுகிறார். ஆம் ஆத்மி சார்பில் ஹனுமந்தப்பா குரி என்பவரும் களத்தில் உள்ளார். இருபெரும் தலைவர்கள் போட்டியிடுவதால் எலபூர்கா தொகுதி தேர்தல் களம் இப்போதே சூடுபிடித்துள்ளது.
கொப்பல்
கொப்பல் சட்டமன்ற தொகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக இரு குடும்பத்தினரைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அரசியல் செய்து வருகிறார்கள். அதாவது கரடி-ஹிட்னால் ஆகிய இரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களே அரசியலில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த இரு குடும்பத்தினர் மட்டுமே இங்கு மக்கள் தலைவர்களாக விளங்குகிறார்கள். கரடி சங்கண்ணா என்பவர் இத்தொகுதியில் 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். அவர் ஒருமுறை சுயேச்சையாகவும், ஒருமுறை ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பிலும், ஒருமுறை ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு அவர் பா.ஜனதா சார்பில் களம் கண்டு தோல்வி அடைந்தார். அவர் காங்கிரஸ் வேட்பாளர் ராகவேந்திரா பசவராஜ் ஹிட்னாலிடம் தோல்வி அடைந்திருந்தார். அதன்பிறகு 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் ராகவேந்திரா பசவராஜ் ஹிட்னாலே காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி கண்டார். தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும் ராகவேந்திரா ஹிட்னாலே மீண்டும் காங்கிரஸ் சார்பில் இத்தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் மஞ்சுளா அமரேஷ் களம் நிறுத்தப்பட்டு உள்ளார். மேலும் ஆம் ஆத்மி கட்சி சார்பில் எம்.கே.சாகிப் நாகேஷனஹள்ளி என்பவரும் போட்டியிடுகிறார். சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதில் மஞ்சுளா அமரேஷ் ஜனதா தளம்(எஸ்) கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் கர்நாடகத்தின் நெற்களஞ்சியமான கொப்பல் மாவட்டத்தை கைப்பற்றப்போவது யார் என்பதை அறிய வருகிற 13-ந் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை காத்திருக்க வேண்டும்.