கொல்கத்தா பயங்கரம்; புகைப்படங்கள், வீடியோக்களை நீக்க சமூக வலைதளங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


கொல்கத்தா பயங்கரம்; புகைப்படங்கள், வீடியோக்களை நீக்க சமூக வலைதளங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x

கொல்கத்தா பெண் டாக்டரின் புகைப்படங்கள், வீடியோக்களை நீக்க சமூக வலைதளங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா நகரின் வடபகுதியில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர். நாளை வரை (23-ந்தேதி) அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்ட நிலையில், சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், கொடூரமாக கொல்லப்பட்ட பெண் டாக்டரின் அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமான குறிப்புகளையும் உடனடியாக நீக்க சமூக வலைதளங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதன்படி உயிரிழந்த பெண் டாக்டரின் புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை சமூக ஊடகங்கள், மின்னணு ஊடகங்களில் இருந்து உடனடியாக நீக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, இந்தியாவில் செயல்படும் சமூக ஊடக தளங்களை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு இணங்குமாறு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இதன்படி பெயர், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்பட உயிரிழந்தவர் தொடர்பான அனைத்து குறிப்புகளையும் உடனடியாக நீக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.



Next Story