பா.ஜ.க.வின் 12 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு எதிரான மனு - கொல்கத்தா ஐகோர்ட்டு தள்ளுபடி


பா.ஜ.க.வின் 12 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு எதிரான மனு - கொல்கத்தா ஐகோர்ட்டு தள்ளுபடி
x

பா.ஜ.க.வின் 12 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கார் மருத்துவமனையில் கடந்த 9-ந்தேதி பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனிடையே இந்த வழக்கின் விசாரணை கொல்கத்தா காவல்துறையிடம் இருந்து சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. அதே சமயம், பெண் டாக்டரின் கொலைக்கு நீதி கேட்டும், டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் கொல்கத்தாவில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

அந்த வகையில், புதிதாக உருவாக்கப்பட்ட சத்ர சமாஜ் என்ற மாணவர் அமைப்பினர், நேற்றைய தினம் நபன்னா அபியான் என்ற பெயரில் அரசை கண்டித்து தலைமை செயலகத்தை நோக்கி பேரணியாக செல்ல முற்பட்டனர். அப்போது நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாதுகாப்பு படையினர் மீது கற்கள் வீசப்பட்டன.

இதையடுத்து போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் பாதுகாப்பு படையினர் அவர்களை கலைத்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த சூழலில், போலீசாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்கு வங்காளத்தில் 12 மணிநேர வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு பா.ஜ.க. இன்று அழைப்பு விடுத்தது.

இந்நிலையில் பா.ஜ.க.வின் வேலைநிறுத்தப் போராட்டத்தை சட்டவிரோதம் என அறிவிக்கக்கோரி கொல்கத்தா ஐகோர்ட்டில் சஞ்சய் தாஸ் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு ஐகோர்ட்டு தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சஞ்சய் தாசுக்கு ஏற்கனவே பொதுநல மனு தாக்கல் செய்ய ஐகோர்ட்டு தடை விதித்திருப்பதாக கூறி, அவர் தற்போது தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முன்னதாக சஞ்சய் தாஸ் தாக்கல் செய்த பொதுநல மனு ஒன்று நீதிபதி ஹிரன்மய் பட்டாச்சாரியா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அவர் மனுவில் தன்னைப்பற்றிய தவறான தகவல்களை குறிப்பிட்டதாகவும், நீதிமன்றத்தின் நடைமுறையை துஷ்பிரயோகம் செய்ததாகவும் கூறி அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டதோடு, அவருக்கு ரூ.50,000 அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story