9 ஆண்டுகளுக்கு முன் கடத்தல்... போஸ்டர் உதவியால் குடும்பத்துடன் இணைந்த சிறுமி
9 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட சிறுமி போஸ்டர் உதவியால் தனது குடும்பத்துடன் மீண்டும் இணைந்துள்ளார்.
மும்பை,
மராட்டியத்தின் மும்பை நகரில் அந்தேரி பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த சிறுமி பூஜா. தனது 7 வயதில், 2013ம் ஆண்டு ஜனவரி 22ந்தேதி காலையில் சகோதரருடன் பள்ளிக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
அவரை அணுகிய ஹென்றி டிசோசா என்பவர் ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து கடத்தி சென்று விட்டார். இதன்பின்பு, உடனடியாக கர்நாடகாவுக்கு தப்பி சென்றுள்ளார். பூஜாவை விடுதி ஒன்றிக்கு அனுப்பியுள்ளார். சிறுமியின் பெயரை ஆன்னி டிசோசா என மாற்றியுள்ளார்.
இதன்பின்னர், ஹென்றிக்கு குழந்தை பிறந்துள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் மீண்டும் மும்பைக்கு திரும்பி வந்துள்ளனர். ஹென்றியும், அவரது மனைவியும், பூஜாவை அனைத்து வீட்டு வேலைகளையும் வாங்கி உள்ளனர். சரிவர சிறுமியை கவனிக்காமல் விட்டு விட்டனர். 16 வயது எட்டிய பூஜாவுக்கும் தனது குடும்ப உறுப்பினர்களை பற்றிய நினைவே இல்லாமல் போயுள்ளது.
இவ்வளவுக்கும் சில நூறு மீட்டர் தொலைவிலேயே சிறுமியின் குடும்பத்தினர் இருந்துள்ளனர். ஆனால், ஒரு நாள் குடிபோதையில் ஹென்றி, நீ எனது மகள் இல்லை என பூஜாவிடம் கூறியுள்ளார். இதனால், வருத்தமுற்ற பூஜா, தனது தோழி உதவியுடன் கடந்த காலம் பற்றி அறிய முயற்சித்து உள்ளார்.
இணையதளத்தில், காணாமல் போன பூஜா பற்றிய தேடுதலில் ஈடுபட்டு உள்ளார். இதில் இறுதியாக, 2013ம் ஆண்டு போஸ்டர் ஒன்று கிடைத்து உள்ளது. அதில் 5 தொடர்பு எண்கள் இருந்துள்ளன. ஆனால், 4 எண்கள் வேலை செய்யவில்லை. எனினும், கடைசியாக இருந்த எண்ணை முயற்சித்ததில் அது, பூஜாவின் அண்டை வீட்டுக்காரரான ரபீக்கின் தொலைபேசி எண் என தெரிந்தது.
அவரை தொடர்பு கொண்டு பேசி தன்னை பற்றி கூறியுள்ளார். இதனால், ஆச்சரியமடைந்த ரபீக் பின்பு வீடியோ காலில் வந்து, பூஜாவை அடையாளம் கண்டுள்ளார். பின்னர், பூஜாவின் தாயாரையும் பேச வைத்து உள்ளார். பூஜாவின் தாயாரும் தனது மகளை உடனடியாக அடையாளம் கண்டு கொண்டார்.
இருவரும் போனிலேயே அழுதுள்ளனர். உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் முயற்சியுடன் பூஜா மீண்டும் தனது குடும்பத்துடன் இணைந்துள்ளார். இந்த காலகட்டத்தில் பூஜாவின் தந்தை உயிரிழந்து விட்டார்.
மூத்த காவல் அதிகாரி மிலிந்த் குர்தர் கூறும்போது, ஹென்றி கைது செய்யப்பட்டு உள்ளார். தனக்கும், மனைவிக்கும் குழந்தை இல்லாததற்காக பூஜாவை கடத்தினேன் என அவர் கூறியுள்ளார். ஹென்றியின் மனைவியும் வழக்கில் ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார்.
9 ஆண்டுகளுக்கு முன் தனது தாயாருடனும், சகோதரருடனும் பள்ளிக்கு சென்றபோது, கடத்தி செல்லப்பட்டு பிரிந்து சென்ற பூஜா, போஸ்டர் ஒன்றின் உதவியுடன் மீண்டும் தனது குடும்பத்துடன் இணைந்தது அவருக்கு அளவில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.