கேரள வாலிபர் கொலை: நடத்தையில் சந்தேகப்பட்டதால் தீர்த்து கட்டியது அம்பலம்
நடத்தையில் சந்தேகப்பட்டு காதலனை தீர்த்து கட்டியதாக கைதான காதலி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
பெங்களூரு:-
பெங்களூரு உளிமாவு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அக்ஷய்நகரில் வசித்து வந்தவர் ஜாவித் (வயது 28). கேரள மாநிலத்தை சேர்ந்த இவர், பெங்களூருவில் செல்போன்கள் பழுது பார்க்கும் கடை நடத்தி வந்தார். இவருக்கும் ரேணுகா (34) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் காதலாக மாறியது. பின்னர் 2 பேரும் அக்ஷய்நகரில் திருமணம் செய்யாமலேயே கடந்த 3 ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.கடந்த 5-ந் தேதி இரவு ஏற்பட்ட தகராறில் ஜாவித்தை கத்தியால் குத்தி ரேணுகா கொலை செய்திருந்தார். இதுகுறித்து உளிமாவு போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேணுகாவை கைது செய்திருந்தனர். அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.ரேணுகாவுக்கு ஏற்கனவே திருமணமாகி 6 வயதில் மகன் உள்ளான். ஆனாலும் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜாவித்தை காதலித்துள்ளார். திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் 2 பேரும் வசித்துள்ளனர். வேலைக்கு எங்கும் செல்லாமல் ரேணுகா இருந்துள்ளார். ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்ட அவர், பப்களுக்கு பெண்கள் இல்லாமல் தனியாக செல்லும் ஆண்களுக்கு துணையாக ரேணுகா செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இதன்மூலம் அவருக்கு பணம் கிடைத்துள்ளது. இந்த நிலையில், ரேணுகாவின் நடத்தையில் ஜாவித்திற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 5-ந் தேதி ஏற்பட்ட தகராறின் போது ஜாவித்தை கத்தியால் குத்தி கொலை செய்ததாக ரேணுகா தெரிவித்துள்ளார்.