கேரளாவில் கனமழை 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; 11 மாவட்டங்களுக்கு பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை
கேரளாவில் தொடரும் கனமழை 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டு உள்ளது. 11 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.
திருவனந்தபுரம்
கேரளாவில் கடந்த ஒரு வாரமாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இடைவிடாமல் பெய்து வரும் கனமழையால் கேரள மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சிவப்பு, ஆரஞ்ச் மற்றும் மஞ்சள் எச்சரிக்கைகள் விடப்பட்டு வருகின்றன. கனமழையால் கேரள மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியிளிக்கிறது.
கேரளாவில் இன்றும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. 6 மாவட்டங்களில் மிகக் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.8-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மாநிலத்தின் அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் மளமளவென உயர்ந்துவருகிறது. இதனால் பல்வேறு அணைகளிலும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இந்திய வானிலை மையம் இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது.
ஆலப்புழா, கண்ணூர், கோழிக்கோடு, கோட்டயம், காசர்கோடு, பாலக்காடு, இடுக்கி, திருச்சூர், எர்ணாகுளம், பத்தனம்திட்டா மற்றும் கொல்லம் ஆகிய மாவட்டங்களில் கல்லூரிகள், அங்கன்வாடிகள், பள்ளிகள் மற்றும் மதரஸாக்கள் அனைத்து கல்வி நிறுவனங்களும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
கொச்சியில் உள்ள கண்ணாமலியில் கடல் உள்வாங்கியதால் 300க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
கனமழை காரணமாக மாநிலம் முழுவதும் 886 பேர் 48 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.பத்தனம்திட்டா மாவட்டத்தில் (23) அதிக எண்ணிக்கையிலான நிவாரண முகாம்கள் உள்ளன, அங்கு 142 குடும்பங்களைச் சேர்ந்த 515 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கோட்டயம் மாவட்டத்தில் 15 முகாம்கள் உள்ளன, 48 குடும்பங்களைச் சேர்ந்த 163 பேர் தங்கியுள்ளனர், அதே நேரத்தில் ஆலப்புழாவில் ஆறு முகாம்கள் உள்ளன,இங்கு 130 பேர் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.