கேரள சட்டசபையில் கடும் அமளி - சபை காவலர்கள் தாக்கியதில் 3 எம்.எல்.ஏ.க்கள் காயம்
கேரளாவில் சட்டசபையில் கடும் அமளியை தொடர்ந்து தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சபை காவலர்கள் தாக்கியதில் 3 எம்.எல்.ஏ.க்கள் காயம் அடைந்தனர்.
திருவனந்தபுரம்,
கேரள சட்டசபை கூட்டம் நேற்று நடந்தது. காலையில் கேள்வி நேரம் முடிந்ததும் திருவனந்தபுரம் சேங்கோட்டு கோணம் பகுதியில் 16 வயது மாணவியை 4 பேர் தாக்கிய சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் சார்பில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால் சபாநாயகர் ஷம்சீர் அதற்கு அனுமதி மறுத்தார். இதற்கு எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கடும் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கொண்டு வரும் ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு இதுபோல் தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டினர்.
இதற்கிடையே கொச்சியில் சமீபத்தில் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து முதல்-மந்திரி பினராயி விஜயன் சட்டசபையில் விளக்கம் அளித்து பேச தொடங்கினார். அப்போது ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து சபையில் இருந்து காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் அவர்கள் சபாநாயகர் அலுவலகத்தின் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே சபை காவலர்கள் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது அவர்களுக்கும், சபை காவலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ரமா என்ற பெண் எம்.எல்.ஏ. உள்பட 3 எம்.எல்.ஏ.க்களுக்கு காயம் ஏற்பட்டது. மேலும் சாலக்குடி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெனீஷ்குமார் மயக்கமடைந்தார்.
இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு இடையே ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களும் அங்கு வந்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழ்நிலை நிலவியது. தொடர்ந்து வலுக்கட்டாயமாக எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.
சபை காவலர்கள் தாக்கியதில் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த ஒரு பெண் எம்.எல்.ஏ. காயமடைந்ததாகவும், ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. மயக்கம் அடைந்ததாகவும் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் மோதலில் சபை காவலர்கள் 5 பேரும் காயமடைந்து சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.