உ.பி.யில் 2 ஆண்டுகால சிறையில் உள்ள கேரள பத்திரிக்கையாளருக்கு ஜாமின்
உத்தரபிரதேச சிறையில் 2 ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்த பத்திரிக்கையாளருக்கு கோர்ட்டு ஜாமின் வழங்கியுள்ளது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் 2020-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி இளம்பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான இளம்பெண் பின்னர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக செய்தி சேகரிக்க கேரளாவை சேர்ந்த பத்திர்க்கையாளர் சித்திக் கப்பன் 2020 அக்டோபர் 5-ம் தேதி ஹத்ராஸ் மாவட்டத்திற்கு சென்றார். ஆனால், அவரை உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் போலீசார் கைது செய்தனர்.
கப்பனுடன் சேர்த்து அவருடன் வந்த ரல்ப் ஷெரிப், அதிஹுர் ரஹ்மான், மசூத் அகமது, முகமது ஆலம், அப்துல் ரசாக், அஷ்ரப் காதீர் ஆகியோரை உத்தரபிரதேச போலீசார் கைது செய்தனர்.
பத்திரிக்கையாளர் கப்பன் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் (தடைசெய்யப்பட்ட அமைப்பு) மாணவர் பிரிவான கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகவும், ஹத்ராஸ் விவகாரத்தை மதரீதியில் கொண்டுசெல்ல திட்டமிட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதனிடையே, கப்பன் மீது சட்டவிரோத செயல்பாடுகள் (தடுப்பு) சட்டம் (யுஏபிஏ), பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர் லக்னோ சிறையில் அடைக்கப்பட்டார். அதேவேளை, இந்த விவகாரத்தில் பணமோசடி தொடர்பாகவும் அமலாக்கத்துறையும் கப்பன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் பல மாதங்கள் சிறையில் இருந்த சித்திக்கிற்கு பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு ஜாமின் வழங்கியது. ஆனால், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சித்திக்கிற்கு ஜாமின் கிடைக்காததால் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக சிறையில் இருந்த சித்திக்கிற்கு அமலாக்கத்துறை பதித்த பணமோசடி வழக்கில் லக்னோ கோர்ட்டு ஜாமின் வழங்கியுள்ளது. இதையடுத்து, அனைத்து வழக்கிலும் ஜாமின் கிடைத்ததால் 2 ஆண்டுகளாக சிறையில் இருந்த சித்திக் விரைவில் விடுதலை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.