கேரளா நரபலி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூவரையும் 9 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவு!
குற்றம் சாட்டப்பட்ட மூவரும் ஒருநாள் விட்டு ஒருநாள் வீதம் தங்கள் வழக்கறிஞரை சந்திக்க ஐகோர்ட்டு அனுமதி வழங்கியது.
கொச்சி,
கேரளாவில் கடவந்தறா பகுதியில் தனியாக வசித்துவந்த, சாலையோர லாட்டரி சீட்டு விற்பனையாளரான ரோஸ்லி(59) என்ற பெண் திடீரென காணாமல் போனார். தமிழகத்தின் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பத்மா என்ற பெண்ணும் திடீரென காணாமல் போனார்.
பத்மா எர்ணாகுளத்தில் தங்கியிருந்து கேரள லாட்டரி சீட்டு விற்பனை செய்துவந்தார். அவரை அவரது குடும்பத்தினர் தொடர்பு கொண்டபோது அலைபேசி தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாகவே ஒலிக்க, கொச்சின் காவல்நிலையத்தில் புகார் செய்தனர்.
சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன் பத்மாவின் செல்போன் சிக்னலை ஆராய்ந்தனர். இதில் அவரது செல்போன் சிக்னல் கடைசியாக திருவல்லா பகுதியில் காட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தனர். அதில் ஷிகாப் என்பவருடன் பத்மா செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது.
இதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ஷிகாப்பை விசாரித்தபோது, ஷாஜி என்கின்ற முகமது ஷிகாப் அவர்களை பகவல்சிங் வீட்டிற்கு அந்த பெண்கள் இருவரையும் அழைத்துப்போனதும், லைலா, பகவல் சிங், ஷிகாப் மூவரும் சேர்ந்து அவர்களை நரபலி கொடுத்ததும் தெரியவந்தது. இச்சம்பவம் நாட்டையே உலுக்கியது. இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தனர்.
கேரளா நரபலி வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட மூவரையும் 12 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க எர்ணாகுளம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்ட மூவரும் கேரள ஐகோர்ட்டை அணுகினர்.
இந்த மனுவை விசாரித்த கேரள ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. மேலும், நரபலி கொடுப்பதற்காக இரண்டு பெண்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கேரள மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்று கோர்ட்டு குறிப்பிட்டுள்ளது.
அதேவேளையில், குற்றம் சாட்டப்பட்ட மூவரையும் 9 நாள் போலீஸ் காவலில் வைத்து உத்தரவிட்டது. அத்துடன் அவர்கள் அனைவரும் ஒருநாள் விட்டு ஒருநாள் வீதம், ஒருநாளில் 15 நிமிடங்களுக்கு தங்கள் வழக்கறிஞரை சந்திக்க ஐகோர்ட்டு அனுமதி வழங்கியது.
இந்த நிலையில், முக்கிய குற்றவாளியான முகமது ஷபியிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதாக கொச்சி போலீஸ் கமிஷனர் கூறினார்.