கேரளா: தோழிகள் இருவருக்குள் மலர்ந்த காதல்! பெற்றோர் எதிர்ப்பு; ஆதிலா-பாத்திமா சேர்ந்து வாழ ஐகோர்ட்டு அனுமதி!


கேரளா: தோழிகள் இருவருக்குள் மலர்ந்த காதல்! பெற்றோர் எதிர்ப்பு; ஆதிலா-பாத்திமா சேர்ந்து வாழ ஐகோர்ட்டு அனுமதி!
x

இருவரையும் சவூதி அரேபியாவில் ஒன்றாக படிக்க அனுப்பியுள்ளனர். அங்குதான் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது.

கொச்சி,

கேரளாவை சேர்ந்த ஓரினச் சேர்க்கையாளர்களான ஆதிலா நஸ்ரின் மற்றும் பாத்திமா நூரா ஆகிய இரு பெண்களும் சேர்ந்து வாழ கேரள ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

கேரளாவின் ஆலுவா பகுதியை சேர்ந்த ஆதிலா(22 வயது) மற்றும் கோழிக்கோட்டை சேர்ந்த பாத்திமா நூரா(23 வயது) ஆகிய இருவரும் ஒருவரையொருவர் விரும்பி வந்தனர்.

இரு பெண்களின் குடும்பங்களும் நட்பாக இருந்ததால் அவர்கள் இருவரையும் சவூதி அரேபியாவில் ஒன்றாக படிக்க அனுப்பியுள்ளனர். அங்குதான் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இவர்களது விவகாரம் குடும்பத்தினருக்கு தெரிந்ததையடுத்து, இருவரும் பிரிக்கப்பட்டனர்.


அவர்கள் இருவரும் 'லிவிங் டுகெதர்' முறையில் ஒன்றாக இணைந்து வாழ முடிவெடுத்து, மே 19-ம் தேதி ஒன்றாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் இருவரும் அவரவர் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.

அவர்கள் கோழிக்கோட்டில் உள்ள வனஜா கலெக்டிவ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் தஞ்சம் புகுந்தனர். அது (லெஸ்பியன்)ஓரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஆதரவளிக்கும் இடமாகும்.

இந்நிலையில், பாத்திமாவின் உறவினர்கள், பாத்திமாவை கடத்திக்கொண்டு சென்றதையடுத்து, ஆதிலா போலீசில் புகார் அளித்திருந்தார். காதலர்களை அவர்களது உறவினர்கள் ஒரு வாரமாக பிரித்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.


பாத்திமாவின் தந்தை, தன் மகளை எப்படியாவது ஆண் வாசம் பிடிக்க வைத்து, அவளது பாலியல் எண்ணங்களை மாற்றும் முயற்சியில், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மேலும், இருவரும் மீண்டும் ஒன்றிணைவதற்கு, கோர்ட்டு தலையிட்டு எங்களை சேர்த்து வைக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த கேரளா ஐகோர்ட்டு, ஆதிலா நஸ்ரின் மற்றும் பாத்திமா நூரா ஆகிய இரு பெண்களும் சேர்ந்து வாழ கேரள ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.


Next Story