சுவப்னா சுரேஷ் முன்ஜாமீன் மனு தள்ளுபடி; பாதுகாப்பு அளிக்க உத்தரவு


சுவப்னா சுரேஷ் முன்ஜாமீன் மனு தள்ளுபடி; பாதுகாப்பு அளிக்க உத்தரவு
x

Image Courtacy: ANI

பினராயி விஜயன் மீது குற்றம் சாட்டிய சுவப்னா சுரேஷ் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த கேரள ஐகோர்ட்டு, பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தி வந்ததில் முக்கிய குற்றவாளியான சுவப்னா சுரேஷ் எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்தார். அதில் தங்கம் கடத்தலில் முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக கூறினார். அதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் காங்கிரஸ், பா.ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

இந்தநிலையில் கூட்டு சதித்திட்டம் தீட்டியது மற்றும் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டதாக சுவப்னா சுரேஷ் மீது முன்னாள் மந்திரி ஜலீல் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்கக்கோரி கேரள ஐகோர்ட்டில் சுவப்னா சுரேஷ் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை கேரள ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. அதே நேரத்தில் சுவப்னா சுரேஷ் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி உள்ளதால், அவருக்கு பலத்த பாதுகாப்பு அளிக்க உத்தரவு பிறப்பித்தது.

அதை தொடர்ந்து, பாலக்காட்டில் சுவப்னா சுரேஷ் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் அவர் பணியாற்றும் நிறுவனத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் வீட்டை சுற்றி கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக கூறிய குற்றச்சாட்டை வாபஸ் பெறுமாறு ஷாஜி கிரண் மிரட்டியதாக சுவப்னா சுரேஷ் கூறியிருந்தார்். ஷாஜி கிரண் முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் கோடியேரி பாலகிருஷ்ணனுக்கு நெருக்கமானவர் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில், இருவரும் பேசிய உரையாடல்களை சுவப்னா சுரேஷ் நேற்று வெளியிட்டார். அதை மறுத்த ஷாஜி கிரண் உரையாடல்களில் மாறுதல் செய்து வெளியிடப்பட்டு உள்ளதாக கூறி உள்ளார்.

அதே சமயம் சுவப்னா சுரேஷின் ஆபாச வீடியோக்களை வெளியிடப் போவதாக ஷாஜி கிரண் கூறியதாக வெளியான தகவலால் கேரளாவில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.


Next Story