கேரளாவில் பல்கலைக்கழக துணைவேந்தர் சஸ்பெண்ட் -கவர்னர் அதிரடி
பூக்கோடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் ராகிங் கொடுமை காரணமாக மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
திருனந்தபுரம்,
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் பூக்கோடு கேரளா கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு சித்தார்த்தன் என்ற மாணவர் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். இந்த நிலையில், கடந்த மாதம் 18-ம் தேதி அவர் தங்கியிருந்த அறையின் குளியலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், சித்தார்த்தனை சில மாணவர்கள் கடுமையான ராகிங் கொடுமைக்கு உட்படுத்தியதாக தெரியவந்தது.
இந்த குற்றச்சாட்டுகளில் எஸ்.எப்.ஐ., அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சிஞ்சோ ஜான்சன் உட்பட 4 பேரை கைது செய்துள்ள போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 8 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில், பல்கலைக்கழக துணைவேந்தரான சசீந்திரநாத்தை இடை நீக்கம் செய்து கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.