கலாமண்டலம் பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து கவர்னர் ஆரிப் முகமது கான் நீக்கம் - கேரள அரசு அதிரடி நடவடிக்கை
மாநில அரசு எடுக்கும் முடிவுகளை கேரள கலாமண்டலத்தின் நிர்வாக அமைப்பு பின்பற்றும் என்று திருத்தப்பட்ட விதிகளில் கூறப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரள மாநில அரசுக்கும், மாநில கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே தொடக்கம் முதலே முட்டல் மோதல் போக்கு நிலவி வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர், துணைவேந்தர்களை கவர்னர் நியமிக்கும் அதிகாரத்தை பறிக்கும்
வகையில் அம்மாநில சட்டப்பேரவையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், கேரள பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியில் இருந்து கவர்னரை நீக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டு வர முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. மேலும், அந்த பதவிக்கு நிபுணர் ஒருவரை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில், கேரள கலாமண்டலம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவியில் இருந்து கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் நீக்கப்பட்டுள்ளார்.
கேரள கவர்னர் ஆரிப் முகமது கானுக்குப் பதிலாக ஒரு புகழ்பெற்ற நபரை வேந்தர் பதவியில் நியமிக்க பல்கலைக்கழக விதிகளை மாற்றியுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
கலாச்சார விவகாரங்கள் துறை வெளியிட்டுள்ள உத்தரவின்படி, கேரள கலாமண்டலத்தின் நிர்வாக அமைப்பு மாநில அரசு எடுக்கும் முடிவுகளைப் பின்பற்றும் என்று கேரள கலாமண்டலம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் திருத்தப்பட்ட விதிகளில் கூறப்பட்டுள்ளது.