கேரள கவர்னர்-மாநில அரசு மோதல் முற்றுகிறது: கவர்னர் பகிரங்க குற்றச்சாட்டு; மந்திரி எதிர்ப்பு


கேரள கவர்னர்-மாநில அரசு மோதல் முற்றுகிறது: கவர்னர் பகிரங்க குற்றச்சாட்டு; மந்திரி எதிர்ப்பு
x

கேரள கவர்னருக்கும், மாநில அரசுக்கும் இடையே மோதல் முற்றுகிறது. கவர்னர் பகிரங்க குற்றச்சாட்டு தெரிவித்தார். அதற்கு மந்திரி எதிர் குரல் கொடுத்துள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி அரசு நடந்து வருகிறது. கவர்னராக ஆரிப் முகமதுகான் பதவி வகித்து வருகிறார்.

கவர்னருக்கும், மாநில அரசுக்கும் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக மோதல் நடந்து வருகிறது. லோக் ஆயுக்தா சட்ட திருத்தம், பல்கலைக்கழக வேந்தரான கவர்னரின் அதிகாரத்தை குறைத்தல் ஆகியவை தொடர்பான அவசர சட்டங்களுக்கு கவர்னர் கையெழுத்திட மறுத்து விட்டார். இதனால் அந்த அவசர சட்டங்கள் காலாவதி ஆகிவிட்டன.

இதையடுத்து, சட்டசபையில் கடந்த 30 மற்றும் 1-ந் தேதிகளில் லோக் ஆயுக்தா திருத்த மசோதா, பல்கலைக்கழகங்களில் கவர்னரின் அதிகாரத்தை குறைக்கும் மசோதா ஆகியவை காங்கிரஸ் உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றப்பட்டன. ஆனால் அந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன் என்று கவர்னர் கூறியுள்ளார்.

கவர்னர் பேட்டி

இந்தநிலையில், கவர்னர் ஆரிப் முகமது கான் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினார். அதில், மாநில அரசு மீது பகிரங்க குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

கடந்த 2019-ம் ஆண்டு நான் கண்ணூர் பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவுக்கு சென்றபோது சிலர் என்னை முற்றுகையிட்டனர். அது திடீரென எழுந்த எதிர்ப்பு என்றால், அவர்கள் கையில் பதாகைகள் வந்தது எப்படி?

அவர்களை போலீசார் தடுத்தனர். ஆனால், ஒரு மூத்த நிர்வாகி (கே.கே.ராகேஷ்), போலீசாரை கடமையை செய்ய விடாமல் தடுத்தார். அவர் தற்போது முதல்-மந்திரியின் தனிச்செயலாளராக உள்ளார். அதற்குத்தான் அவருக்கு பதவி உயர்வு அளித்துள்ளார்கள் போலிருக்கிறது.

மாற்றுக்கருத்து தெரிவிப்பவர்களின் குரலை ஒடுக்குவதில்தான் மாநில அரசின் முழு கவனமும் உள்ளது. கவர்னர் மாளிகையையும் விட்டுவைக்கவில்லை. கவர்னர் மாளிகை ஊழியர் நியமனத்தில் அரசு தலையிட்டு கேள்வி கேட்கிறது. இதுபோன்ற தந்திரங்கள் என்னிடம் பலிக்காது.

நான் ஆட்சியாளர்களுக்கே பதவிப்பிரமாணம் செய்து வைத்தவன். எனது அதிகாரத்தை அவர்களால் பறிக்க முடியாது. மாநிலத்தின் வருவாய் பெரும்பாலும் லாட்டரியையும், மது விற்பனையையும் சார்ந்து இருப்பது வெட்கக்கேடு என்று அவர் கூறினார்.

மந்திரி குற்றச்சாட்டு

இதற்கிடையே கவர்னருக்கு எதிராக கேரள சட்ட மந்திரி பி.ராஜீவி பகிரங்க பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது கூடிய விரைவில் கவர்னர் முடிவு எடுக்க வேண்டும் என்று அரசியல் சட்டமும், பல்வேறு கோர்ட்டு உத்தரவுகளும் கூறுகின்றன. மசோதாவில் ஏதேனும் முரண்பாடு இருந்தால், சட்டசபையிடம் விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பலாம்.

அதை ஏற்பதும், நிராகரிப்பதும் அரசின் விருப்பம். ஆனால், மீண்டும் அந்த மசோதாவை அனுப்பி வைத்தால், அதற்கு கவர்னர் ஒப்புதல் அளித்தாக வேண்டும். அவர் மசோதாக்களை முடக்கலாம். ஆனால், காலவரையின்றி முடக்க முடியாது. நிராகரிக்கவும் முடியாது.

அரசியல் சட்ட பதவி வகிப்பவர்கள், அரசியல் சட்டப்படி நடக்கிறார்களா என்று பொதுமக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். எனவே, அரசியல் சட்டப்படி கவர்னர் நடந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.


Next Story