'கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது இந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாள்' - சந்திரசேகர் ராவ்


கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது இந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாள் - சந்திரசேகர் ராவ்
x

மத்திய பா.ஜ.க. அரசு எதிர்கட்சிகளை முற்றிலுமாக அழிக்க நினைக்கிறது என சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்,

டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு கைது செய்தனர். பின்னர், அவரை அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ கோர்ட்டில் அமலாக்கத்துறையினர் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா முன்பு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து கெஜ்ரிவாலை 6 நாட்கள்(வரும் 28-ந்தேதி வரை) அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது.

இந்த நிலையில் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது இந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாள் என பி.ஆர்.எஸ். கட்சியின் தலைவரும், தெலுங்கானா மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியுமான சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது;-

"டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது இந்திய ஜனநாயகத்தின் வரலாற்றில் ஒரு கருப்பு நாள். அதேபோல் சமீபத்தில் ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன், பி.ஆர்.எஸ். எம்.எல்.சி. கே.கவிதா ஆகியோர் கைது செய்யப்பட்ட நிகழ்வுகள் மூலம் மத்திய பா.ஜ.க. அரசு எதிர்கட்சிகளை முற்றிலுமாக அழிக்க நினைக்கிறது என்பது புரிகிறது.

இதற்காக பா.ஜ.க. அரசு வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகளை பயன்படுத்துகிறது. பா.ஜ.க.வின் செயல்பாடுகள் ஜனநாயகத்தின் மீது விழுந்த கோடாரியைப் போல் மாறி வருகின்றன. இதை பி.ஆர்.எஸ். கட்சி கடுமையாக கண்டிக்கிறது."

இவ்வாறு சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.


Next Story