அமலாக்க துறை காவலில் இருந்தபடி முதல் உத்தரவு பிறப்பித்த கெஜ்ரிவால்


அமலாக்க துறை காவலில் இருந்தபடி முதல் உத்தரவு பிறப்பித்த கெஜ்ரிவால்
x
தினத்தந்தி 24 March 2024 10:48 AM IST (Updated: 24 March 2024 11:21 AM IST)
t-max-icont-min-icon

கெஜ்ரிவால், அமலாக்க துறை காவலில் இருந்தபடி, நீர் அமைச்சகத்துடன் தொடர்புடைய முதல் உத்தரவை பிறப்பித்து உள்ளார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

புதுடெல்லி,

டெல்லியில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கில், டெல்லி முதல்-மந்திரி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலை, விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை அவருக்கு 9 முறை சம்மன் அனுப்பியிருந்தது.

ஆனால், இந்த சம்மன் சட்ட விரோதம் என கூறி கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வந்தார். இது தொடர்பான வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் நடைபெற்றது. எனினும், கெஜ்ரிவாலின் வழக்கை ஐகோர்ட்டு, தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதேபோன்று, அமலாக்கத்துறை கைதுக்கு தடை விதிக்கவும் டெல்லி ஐகோர்ட்டு மறுத்து விட்டது.

இதன் தொடர்ச்சியாக, கடந்த வியாழக்கிழமை அமலாக்கத்துறை குழுவினர், கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். 2 மணிநேர சோதனை மற்றும் விசாரணைக்கு பின்னர், அமலாக்க பிரிவு அதிகாரிகள் கெஜ்ரிவாலை அன்றிரவு கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கெஜ்ரிவால் வீட்டின் முன் ஆம் ஆத்மி தொண்டர்கள் குவிந்தனர். கலவரம் பரவி விடாமல் இருக்க போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர்.

கெஜ்ரிவால் கைது நடவடிக்கைக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என ஆம் ஆத்மி தெரிவித்தது. அகிலேஷ் யாதவ், மெகபூபா முப்தி, ராகுல் காந்தி, சரத் பவார், பிரியங்கா காந்தி, மு.க. ஸ்டாலின், சசி தரூர் உள்ளிட்ட இந்தியா கூட்டணியை சேர்ந்த தலைவர்கள் பலரும் அதிர்ச்சியும், கண்டனமும் தெரிவித்தனர்.

இந்த சூழலில், மத்திய டெல்லியில் உள்ள அமலாக்கத்துறையின் தலைமையகத்திற்கு கெஜ்ரிவால் கொண்டு செல்லப்பட்டார். இந்த விசயத்தில், முதல்-மந்திரியாக இருக்கும்போது, ஒருவர் கைது செய்யப்படுவது என்பது முதல் முறையாகும். நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு கட்சிகள் தீவிர பணிகளில் ஈடுபட்டு வரும் சூழலில், எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள, ஆம் ஆத்மியை சேர்ந்த டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது அரசியலில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அமலாக்க துறை காவலில் இருந்தபடி கெஜ்ரிவால், தனது முதல் உத்தரவை பிறப்பித்து உள்ளார். இந்த உத்தரவானது, நீர் அமைச்சகத்துடன் தொடர்புடையது என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இதுபற்றி டெல்லி மந்திரி அதிஷி இன்று காலை செய்தியாளர்கள் சந்திப்பில் விரிவாக விளக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், டெல்லி மந்திரி அதிஷி கூறும்போது, தேவைப்பட்டால் கெஜ்ரிவால் சிறையில் இருந்தபடி அரசை வழிநடத்துவார். அவர் அரசை நடத்த முடியும். அவரை பணி செய்ய விடாமல் தடுக்க எந்த விதியும் இல்லை. அவர் குற்றவாளி என அறிவிக்கப்படவில்லை.

அதனால், டெல்லி முதல்-மந்திரியாக அவர் தொடர்ந்து நீடிப்பார் என்று கூறினார். இதேபோன்று, கைது செய்யப்பட்டபோதும், கெஜ்ரிவால் பதவியில் இருந்து விலகவில்லை. அவருக்கு 28-ந்தேதி வரை அமலாக்க துறை காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது.


Next Story