திகார் சிறை முன்பு ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்கக்கோரி திகார் சிறை முன்பு ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
புதுடெல்லி,
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சர்க்கரை நோயாளியான கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்க கோர்ட்டு அனுமதி அளித்தும் திகார் சிறை நிர்வாகம் அதை வழங்கவில்லை என்றும், இதன் மூலம் கெஜ்ரிவாலை கொல்ல சதி நடப்பதாகவும் ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
இந்த நிலையில் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்கக்கோரி திகார் சிறை முன்பு ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி கேபினட் மந்திரி அதிஷி, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சஞ்சீவ் ஜா உள்பட கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும், ஏராளமான கட்சி தொண்டர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்கள் 'கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் கொடுங்கள்' என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி போராடினர்.
போராட்டத்தின்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய அதிஷி, "இது போராட்டம் அல்ல. சர்க்கரை நோயாளியாக உள்ள முதல்-மந்திரி கெஜ்ரிவாலின் உடல்நிலை குறித்து டெல்லி மக்கள் கவலையடைந்துள்ளனர். அவருக்கு இன்சுலின் அனுப்பியுள்ளனர்.
தங்களிடம் சிறப்பு டாக்டர்கள் இருப்பதாக திகார் நிர்வாகம் கூறியது. ஆனால் நேற்று அவர்கள் நீரிழிவு டாக்டர் கேட்டு எய்ம்ஸ்-க்கு கடிதம் எழுதியுள்ளனர். கெஜ்ரிவால் கிட்டத்தட்ட 20 நாட்களாக நீதிமன்றக் காவலில் இருக்கிறார். ஆனால் அவர்கள் இப்போதுதான் நீரிழிவு நிபுணரைக் கேட்கிறார்கள். இது ஒரு சதி இருப்பதைக் காட்டுகிறது. அவரது சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது. அவருக்கு இன்சுலின் மறுப்பது அவரது ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது" என்றார்.