டெல்லி சுகாதாரத்துறை மந்திரி மீதான குற்றச்சாட்டுகள் தவறானது; கெஜ்ரிவால்
பண மோசடி வழக்கில் டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயின் நேற்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
புதுடெல்லி,
பண மோசடி வழக்கில் டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயின் நேற்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்தது. கேள்விகளுக்கு அவர் உரிய பதில் அளிக்கவில்லை என்றும் கூறியது. ஜெயின் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஜூன் 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டது.
இந்த நிலையில், சத்யேந்திர ஜெயினுக்கு ஆதரவு தெரிவித்துள்ள டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், " சத்யேந்திர ஜெயின் மீதான குற்றச்சாட்டுகள் தவறானது" என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறும் போது, " நாங்கள் தீவிர தேசபற்று மிக்கவர்கள். ஊழல் தேசத்திற்கு துரோகம் செய்யும் செயல் என்று நாங்கள் கருதுகிறோம். நாங்கள் உயிரை விட்டாலும் தேசத்திற்கு துரோகம் இழைக்க மாட்டோம். ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததால், எங்கள் சொந்த மந்திரியையே நாங்கள் பதவியில் இருந்து நீக்கியதோடு, கைது செய்தோம். ஊடகங்கள், எதிர்க்கட்சிகள் என யாருக்கும் ஊழல் விவகாரம் தெரியாததால், அதை மூடி மறைத்திருக்க முடியும். ஆனால் நங்கள் அவ்வாறு செய்யவில்லை.சத்யேந்திர ஜெயின் துணிச்சல் மிக்கவர். தீவிர தேசபற்று மிக்கவர். எனவே, தற்போது கிடைத்திருக்கும் அனுபவம் அவரை மேலும் வலுவாக்கும்" என்று தெரிவித்துள்ளார்.