கர்நாடகத்தில் அமைதியை காப்பது எங்களின் பணி- முதல்-மந்திரி சித்தராமையா அறிக்கை


கர்நாடகத்தில் அமைதியை காப்பது எங்களின்  பணி- முதல்-மந்திரி சித்தராமையா அறிக்கை
x

கர்நாடகத்தில் அமைதியை காப்பது எங்களின் முதன்மையான பணி என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.

பெங்களூரு:-

தனிப்பட்ட விரோதம்

ஜெயின் துறவி கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணை கேட்டு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் நேற்று முன்தினம் பெங்களூருவில் தர்ணா போராட்டம் நடத்தினர். மேலும் கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக கூறி கவர்னரை நேரில் சந்தித்து அவர்கள் புகார் கடிதம் வழங்கினர். இந்த நிலையில் முதல்-மந்திரி சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கர்நாடகத்தில் பண விவகாரத்தால் நடந்ததாக கூறப்படும் ஜெயின் மத துறவி கொலையில் 6 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். டி.நரசிபுராவில் தனிப்பட்ட விரோதம் காரணமாக வேணுகோபால் என்பவர் கொலை செய்யப்பட்டார். இதில் 24 மணி நேரத்தில் தவறு செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூருவில் ஐ.டி. நிறுவன நிர்வாகிகள் 2 பேர் கொலையில் கொலையாளிகள் 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டனர்.

முதன்மையான பணி

இந்த வழக்குகளில் தவறு செய்தவர்களுக்கு சட்டப்படி உரிய தண்டனை பெற்று தரப்படும். இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். கொலை, கடத்தல் உள்ளிட்ட குற்றங்கள் துரதிருஷ்டமானது.

ஆனால் ஒரு அரசாக இத்தகைய சட்டவிரோத சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க நாங்கள் நேர்மையான முறையில் பணியாற்றி வருகிறோம். சமுதாயத்தில் அமைதியை காப்பது எங்களின் முதன்மையான பணி. இதற்காக சட்டத்தின் கைகளுக்கு கூடுதல் பலம் வழங்கப்படும்.

இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.


Next Story