'காவிரியின் உபரிநீரை தேக்கவே மேகதாதுவில் அணை' - கர்நாடக மந்திரி


காவிரியின் உபரிநீரை தேக்கவே மேகதாதுவில் அணை - கர்நாடக மந்திரி
x

காவிரியின் உபரி நீரை தேக்கிவைத்து பயன்படுத்தவே மேகதாதுவில் அணை கட்டவுள்ளதாக கர்நாடக மந்திரி பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட கர்நாடகம் திட்டமிட்டுள்ளது. அதாவது மின் உற்பத்தி, பெங்களூரு நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த அணையை கட்ட தீர்மானித்து இருப்பதாக கர்நாடக அரசு கூறி வருகிறது.

இந்த அணை திட்டத்தை ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் நிறைவேற்ற முடிவு செய்து, அதற்கான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடகம், மத்திய அரசு மற்றும் மத்திய அரசின் ஜல்சக்தி துறைக்கும் அனுப்பிவைத்து, அணை கட்ட அனுமதி கோரியுள்ளது.

ஆனால் இந்த திட்டத்தால் காவிரி டெல்டா பகுதிகள் கடுமையாக பாதிக்கும் எனக் கூறி தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருப்பினும் மேகதாது அணை கட்டும் முடிவில் கர்நாடக அரசு உறுதியாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், மேகதாது அணை விவகாரம் குறித்து கர்நாடக மந்திரி பிரியங்க் கார்கே கூறியுள்ளதாவது;

"காவிரியின் உபரி நீரை தேக்கிவைத்து பயன்படுத்தவே மேகதாதுவில் அணை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மேகதாது அணை கட்டும் பின்னணியில் யாருடைய ஒதுக்கீட்டு நீரையும் தடுக்கும் எண்ணமோ, மறுக்கும் எண்ணமோ இல்லை. மேகதாது குறித்து தமிழக அரசு புரிந்துகொள்ள வேண்டும்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story