சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி
பெங்களூருவில் சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிவதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருவதுடன், விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதுபற்றி பொதுமக்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
பெங்களூரு:
பெங்களூருவில் சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிவதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருவதுடன், விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதுபற்றி பொதுமக்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
சாலைகளில் சுற்றும் மாடுகள்
தகவல் தொழில் நுட்ப நகரம், பூங்கா நகரம் என்ற பல்வேறு புனைப்பெயர்களுடன் அழைக்கப்படும் பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினையால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். இதற்கு வாகனங்களின் எண்ணிக்கை உயர்வு, சாலை பள்ளங்கள் உள்பட பல காரணங்கள் கூறப்படுகிறது. அதே நேரத்தில் பெங்களூருவில் சமீபமாக சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளாலும் தேவையில்லாத போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதுடன், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.
குறிப்பாக நகரின் முக்கிய சாலைகளில் கூட பசு மாடுகள், எருமை மாடுகள் சர்வ சாதாரணமாக சுற்றித்திரிகின்றன. சில நேரங்களில் போக்குவரத்து சிக்னல்களில் கூட இந்த மாடுகள் படுத்து கொள்கின்றன. அவ்வாறு படுத்திருக்கும் மாடுகள் எழுந்து செல்வது கூட கிடையாது. அந்த மாடுகளை போக்குவரத்து போலீசார், வாகன ஓட்டிகள் விரட்டியடித்தால் மட்டுமே அங்கிருந்து செல்கின்றன. மெஜஸ்டிக், சிட்டி மார்க்கெட், சிவாஜிநகர், பொம்மனஹள்ளி, எலெக்ட்ரானிக் சிட்டி, எம்.ஜி.ரோடு உள்ளிட்ட நகரின் முக்கியமான பகுதிகளில் கூட சுற்றி திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றன.
விபத்து ஏற்பட்டு காயம்
இவ்வாறு சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் திடீரென்று வாகனங்களுக்கு முன்பாக வந்து விடுகின்றன. இதனால் வாகன ஓட்டிகளின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துகள் ஏற்படும் சம்பவங்களும், வாகன ஓட்டிகள் காயம் அடையும் சம்பவங்களும் நடந்து வருவதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்து உள்ளனர்.
அதாவது பசு, எருமை மாடுகளை வளர்க்கும் பொதுமக்கள், அவற்றை தங்களது வீடுகளில் கட்டி போடுவது இல்லை. காலையில் பால் கறந்ததும் அவிழ்த்து விட்டு விடுகின்றனர். அந்த மாடுகள் இரை தேடி சாலைகளில் சுற்றித்திரிவதுடன், ஆங்காங்கே கிடக்கும் குப்பைகளை கிண்டி, கிளறி உணவு சாப்பிடுகின்றன. குப்பைகளும் ஆங்காங்கே சிதறி கிடப்பதுடன் துர்நாற்றமும் வீசுகிறது.
உரிமையாளர்களுக்கும் பாதிப்பு
சிட்டி மார்க்கெட்டை சுற்றி வசிப்பவர்கள் பசு மாடுகளை வாங்கிவிட்டு, அதனை மார்க்கெட்டில் கொண்டு போய் விட்டு விடுகின்றனர். அங்கு கிடக்கும் காய்கறி கழிவுகளை தின்றே மாடுகள் வளர்க்கின்றன. அதே நேரத்தில் அந்த மாடுகள் வியாபாரிகள் வைத்திருக்கும் காய்கறிகள், கீரைகளை கூட எடுத்து தின்று விடுவதால் வியாபாரிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சாலைகளில் சுற்றித்திரியும் பசு, எருமை மாடுகள் வாகனங்களில் அடிபட்டு கால்கள் முறிந்து காயங்கள் அடையும் சம்பவங்களும் நடக்கிறது. பல ஆயிரம் ரூபாய் கொடுத்து மாடுகளை வாங்கும் உரிமையாளர்களுக்கும் இதனால் பாதிப்பும் ஏற்படுகிறது.
கோசாலைகளில் சேர்ப்பு
பெங்களூருவில் இவ்வாறு சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை உணர்ந்த மாநகராட்சியும், இந்த விவகாரத்தை தீவிரம் எடுத்து கொண்டுள்ளது. பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதில் கவனம் செலுத்தி வரும் மாநகராட்சிக்கு, சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளால் புதிய தலைவலியும் ஏற்பட்டு வருகிறது.
அதன்படி, சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து கோசாலையில் சேர்ப்பது, உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் சம்பவங்களில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஆண்டு (2022) ஏப்ரல் மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரை பெங்களூருவில் சுற்றி திரிந்த 909 மாடுகளை மீட்டு இருந்தார்கள்.
ரூ.4.79 லட்சம் அபராதம்
மாநகராட்சி ஊழியர்களால் மீட்கப்படும் மாடுகளை, உரிமையாளர்கள் வந்து கேட்கவில்லை என்றால், கோசேலைக்கு அனுப்பி வைத்து விடுவார்கள். மாடுகளை கேட்கும் உரிமையாளர்களிடம் அபராதம் வசூலித்துவிட்டு, அவர்களிடம் ஒப்படைத்து விடுவார்கள். அதன்படி, கடந்த ஆண்டு (2022) ஏப்ரல் மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரை மாடுகளின் உரிமையாளர்களிடம் இருந்து மட்டும் ரூ.4 லட்சத்து 79 ஆயிரம் அபராதம் வசூலித்திருந்தனர்.
பெங்களூருவில் மட்டும் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுவதில்லை. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களின் தலைநகர், கிராமப்புறங்களிலும் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஐ.டி. ஊழியர் போலீசில் புகார்
பெங்களூருவில் சமீபத்தில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் டுவிட்டர் மூலமாக பெங்களூரு போலீசாருக்கு புகார் கூட அளித்திருந்தார். அதாவது கசவனஹள்ளியில் சாலைகளில் சுற்றித்திரியும் எருமை, பிற மாடுகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், கசவனஹள்ளியில் மாடுகள் நடமாடும் பகுதியை தாண்டி செல்லவே 45 நிமிடம் ஆவதாகவும், எனவே போலீசார் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-
விபத்தில் சிக்க வாய்ப்பு
பெங்களூரு அருகே ஆனேக்கல்லை சேர்ந்த விக்ரம் கூறுகையில், "பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி, அதை சுற்றி ஏராளமான ஐ.டி. நிறுவனங்கள் உள்ளன. அங்குள்ள சாலைகளை சுற்றி மாடுகள் சுற்றி திரிகின்றன. நான் வேலைக்காக செல்லும் போது கொஞ்சம் கவனக்குறைவாக சென்றாலும் கூட, மாடுகள் மீது மோதி கீழே விழுந்து விடுவோம். விபத்தில் சிக்க நிறைய வாய்ப்புள்ளது.
அத்துடன் சாலைகளில் மாடுகள் போடும் சாணத்தால் துர்நாற்றமும் வீசுகிறது. மாடுகளை வளர்க்கும் உரிமையாளர்கள் வீட்டில் கட்டிப்போட்டு வளர்க்கலாம். தேவையில்லாமல் மாடுகள் சுற்றி திரிவதால் வாகன ஓட்டிகள் தான் பாதிக்கப்படுகின்றனர்" என்றார்.
அடுக்குமாடி வீடுகளாகி விட்டது
இதுகுறித்து பெல்லந்தூரை சேர்ந்த அமுதா கூறும் போது, "எங்களது குடும்பத்தினர் பல ஆண்டுகளாக மாடுகள் வளர்த்து வருகிறோம். இதற்கு முன்பு பெங்களூரு காடுகளாக இருந்தது. மேய்ச்சலுக்கு அவிழ்த்து விட்டால் மேய்ந்து விட்டு வீட்டுக்கு வந்துவிடும். தற்போது பெங்களூரு அடுக்குமாடி வீடுகளாகவும், கட்டிடங்களாகவும் மாறி விட்டது.
மாடுகளை எப்போதும் கட்டி போட்டு வளர்க்க சாத்தியமில்லை. நாங்கள் வசிக்க சிறிய வீடு மட்டுமே இருக்கிறது. அப்படி இருக்கையில் மாடுகளை எங்கே கட்டிப்போடுவது. மக்களுக்கு தொந்தரவு ஏற்படாத வண்ணம் மாடுகளை வளர்ப்போம். பசு மாடுகளில் இருந்து கிடைக்கும் பாலை விற்பனை செய்து தான் குடும்பம் நடத்தி வருகிறோம்" என்றார்.
கோசாலையில் விடப்படுகிறது
மாநகராட்சி கால்நடை துறை இணை இயக்குனர் ரவிக்குமார் கூறுகையில், "பெங்களூரு மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் சுற்றி த்திரியும் மாடுகளால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதனை கவனத்தில் கொண்டு தான் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை ஊழியர்கள் மீட்டு வருகின்றனர். அந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. பெங்களூருவில் மக்களுக்கு இடையூறுவை ஏற்படும் மாடுகளை பிடித்து மகாதேவபுராவில் உள்ள கோசாலையில் விடப்படுகிறது. சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள் குறித்து பொதுமக்கள் மாநகராட்சியில் புகார் அளித்தால், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.