காஷ்மீர்: 2 இடங்களில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு
காஷ்மீரில் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த படை வீரர்கள் உடனடியாக செயல்பட்டு, பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை முறியடித்தனர்.
குப்வாரா,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடப்பு ஆண்டில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதன்படி, முதல்கட்ட தேர்தல் செப்டம்பர் 18-ந்தேதியும், 2-வது கட்ட தேர்தல் செப்டம்பர் 25-ந்தேதியும் நடைபெறுகிறது. 3-வது கட்ட தேர்தல் அக்டோபர் 1-ந்தேதி நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலையடுத்து, ரோந்து, வாகன சோதனை என பாதுகாப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், குப்வாரா மாவட்டத்தில் தங்தார் மற்றும் மச்சில் பகுதிகளில் நேற்றிரவு பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டனர்.
எனினும், அந்த பகுதியில் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த படை வீரர்கள் உடனடியாக செயல்பட்டு, இந்த ஊடுருவல் முயற்சியை முறியடித்தனர். இதனை தொடர்ந்து, அந்த பகுதியை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். வேறு பயங்கரவாதிகள் யாரும் ஊடுருவ முயன்றார்களா? என்று கண்டறியும் பணியும் நடந்து வருகிறது.